'ஹிந்தி தெரியாதுனா வெளிநாட்டுக்கு போங்க!' – உபி அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ஹிந்தி பேசாதவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லலாம் என, உத்தர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
, “அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது ஹிந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என தெரிவித்தார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி மொழி விவகாரம் தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது.

இதற்கிடையே அண்மையில், திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், “ஹிந்தி தேசிய மொழி கிடையாது” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில் தர இருவருக்கும் ட்விட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடித்துக் கொண்டனர். நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சுதீப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் அளித்த பேட்டியில், “இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஹிந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு ஹிந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று தெரிவித்து உள்ளார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.