ஹுப்பள்ளி – ஹைதராபாத் விமான சேவை மீண்டும் துவக்கம்

ஹுப்பள்ளி:கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ஹுப்பள்ளி – ஹைதராபாத் தினசரி விமான சேவை, மீண்டும் துவங்கியது.
மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ், ஹுப்பள்ளி – ஹைதராபாத் உட்பட பல நகரங்களுக்கு இடையே ‘இண்டிகோ, அலியான்ஸ் ஏர், ஸ்பைஸ் ஜெட்’ விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனா தொற்று பரவியதால், ஹுப்பள்ளி – ஹைதராபாத் விமான சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது, தொற்று குறைந்துள்ளதால், ஹுப்பள்ளியிலிருந்து ஹைதராபாதுக்கு இண்டிகோ நிறுவனம் நேற்று முன்தினம் முதல் தினசரி விமான சேவையை மீண்டும் துவங்கியுள்ளது. முதல் நாளான ஏப்., 27ல், ஹுப்பள்ளியிலிருந்து காலை 8:00 மணிக்கு 40 பயணியருடன் சென்ற விமானம், 9:10 மணிக்கு ஹைதராபாத் சென்றடைந்தது.

மீண்டும் ஹைதராபாதிலிருந்து காலை 9:40 மணிக்கு 44 பயணியருடன் புறப்பட்ட விமானம், 11:00 மணிக்கு ஹுப்பள்ளி வந்தடைந்தது.இதுபோன்று, மே முதல் வாரத்தில் ஹுப்பள்ளியில் இருந்து மங்களூரு, மைசூருக்கு விமானங்கள் இயக்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இதன்படி, வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் ஹுப்பள்ளியிலிருந்து மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு, மங்களூருக்கு 6:15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மங்களூரிலிருந்து மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:40 மணிக்கு ஹுப்பள்ளி வந்தடையும்.
செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் ஹுப்பள்ளியிலிருந்து மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு, மைசூருக்கு 6:05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மைசூரில் 6:25 மணிக்கு புறப்பட்டு இரவு 7:40 மணிக்கு ஹுப்பள்ளி வந்தடையும்.
இண்டிகோ நிறுவன மூத்த நிர்வாகி மனோஜ் பிரபு கூறுகையில், ”குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் தற்போது விமான ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பணிகள் முடிந்தவுடன், மத்திய அரசு அனுமதியுடன் ஹுப்பள்ளியிலிருந்து ஆமதாபாதுக்கு விமானம் இயக்கப்படும்.
”அத்துடன், ஹுப்பள்ளி – டில்லிக்கு ஜோத்பூர் வழியாகவும்; ஹுப்பள்ளி – திருப்பதி நேரடி விமானம் இயக்கவும் கோரிக்கை வந்துள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன், மே இறுதியில் விமான சேவை துவங்கும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.