புதுடெல்லி: கரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீண்டும் சீனா திரும்ப அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வருகின்றனர். சீனாவில் படிக்கும் மாணவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதுமே கரோனா தொற்று ஏற்பட்டபோது வெளிநாடுகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பினர். சீனாவிலும் தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். சீனாவில் இருந்தும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினார்.
கரோனா தொற்று குறைந்த நிலையில் தாய் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் தாங்கள் படித்த நாடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பினார். ஆனால் இந்திய மாணவர்கள் திரும்பி வருவதற்கு சீனா அனுமதிக்கவில்லை.
ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
பலரது விசா விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீனா முன்னரே அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இந்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் சீனாவில் படித்த இந்திய மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நின்று போகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கை சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி அளித்துள்ளது. சில இந்திய மாணவர்கள் தேவை-மதிப்பீடு அடிப்படையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதித்துள்ளதாக இந்திய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:
சீனாவில் அதிகமான இந்திய மாணவர்கள் படிப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்கள் படிப்பு பாதியில் நின்று போகக்கூடாது என்ற எண்ணம் எங்களிடமும் உள்ளது.
படிப்பை தொடர சீனா திரும்புவதில் இந்திய மாணவர்களுக்கு உள்ள கவலை மற்றும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நாட்டு மாணவர்கள், சீனா திரும்புவதற்கான நடைமுறைகள் மற்றும் அனுபவத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம்.
இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சீனாவிற்கு திரும்ப யார் அக்கறை கொண்டுள்ளனர் என்ற பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம். அவர்களின் விவரத்தை சேகரிக்க இந்தியாவிற்கு சிறிது நேரம் ஆகும்.
தற்போதைய சிக்கலான பெருந்தொற்று காலத்தில் சில இந்திய மாணவர்களை அனுமதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். படிப்பை தொடர்வதற்கு, வெளிநாட்டு மாணவர்கள் சீனா திரும்பும் நிலையில், சர்வதேச பெருந்தொற்று சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள், சீனா திரும்புவது தொடர்பாக, மாணவர்கள் வசதியை ஏற்டுத்தவும், வழிகள் குறித்தும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 25-ம் தேதி அன்று புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேவை-மதிப்பீட்டு அடிப்படையில் இந்திய மாணவர்கள் திரும்புவதை எளிதாக்குவதைப் பரிசீலிப்பதாக சீன கூறியுள்ளது. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் பட்டியலைத் தொகுத்து வருவதாக இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.