அகமதாபாத்:
குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கிக்கு அம்மாநில உயா்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் அருகேயுள்ள கோராஜ் கிராமத்தை சோ்ந்தவிவசாயி சாம்ஜிபாய் என்பவரிடம் இருந்து ராகேஷ் வா்மா, மனோஜ் வா்மா ஆகியோா் ஒரு குறிப்பிட்ட நிலத்தை வாங்கியுள்ளனா். ஆனால், வருவாய்த் துறை பதிவேடுகளில் பெயரை மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு, சாம்ஜிபாய் அந்த நிலத்தைக் காட்டி எஸ்பிஐ வங்கியில் 3 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் பெற்றதுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாம்ஜிபாய் கடன் தொகையை முழுமையாகத் திருப்பி செலுத்திவிட்டு நிலத்தை விற்க முற்பட்டார். ஆனாலும் அந்த நிலத்தை விற்க தடையில்லா சான்றிதழ் வழங்க பல்வேறு காரணங்களைக் கூறி வங்கி மறுத்து வந்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலத்தை வாங்கிய தரப்பினா் குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு நீதிமன்றம், கடன் பெற்ற விவசாயி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டதால் உரிய சான்றிதழை வழங்குமாறு எஸ்பிஐ தரப்பு வக்கீலிடம் வலியுறுத்தியது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த எஸ்பிஐ தரப்பு வக்கீல், அந்த விவசாயி மேலும் 31 பைசா கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனையும் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே கணினி முறையில் பராமரிக்கப்படும் கடன் பிணையில் இருந்து அவா் விடுபட முடியும் என தெரிவித்தார். மேலும் அந்த நபா் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டாா் என்று வங்கி மேலாளா் வாய்மொழியாகக் கூற முடியுமே தவிர, தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவித்தாா்.
இதற்கு அதிருப்தி அடைந்த நீதிமன்றம், ‘50 பைசாவுக்கு கீழ் உள்ள கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கடன் வாங்கியவா் ஏற்கெனவே தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்ட பிறகு, அவரின் நில விற்பனைக்குத் தடையில்லா சான்று வழங்காமல் இருப்பது தவறு. வெறும் 31 பைசா கடன் பாக்கிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மிகவும் தவறான செயல். இதற்காக நீதிமன்ற நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் அந்த விவசாயியை துன்புறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்க செயல். அடுத்த முறை வழக்கு விசாரிக்கப்படும்போது வங்கி மேலாளா் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறியது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.