4வது இடத்தில் அண்ணா பல்கலை| Dinamalar

பெங்களூரு:’கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில், பதக்க பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் தமிழகத்தின் அண்ணா பல்கலை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே இரண்டாவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பெங்களூரில் நடந்து வருகின்றன.வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன், நீச்சல், கால்பந்தாட்டம், ஜூடோ, யோகா, மல்லகம்பா, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் உட்பட 20 போட்டிகள் வரும் 3 வரை நடக்கின்றன. அன்றைய தினம் பெங்களூரு கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நிறைவு விழா நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.இதுவரை நடந்த விளையாட்டு போட்டிகளில், அதிக பதக்கங்கள் பெற்று தர வரிசையில் முதல் ஐந்து இடத்தில், தமிழகத்தின் அண்ணா பல்கலையும் இடம்பெற்றுள்ளது.பெங்களூரு ஜெயின் பல்கலை, 16 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் முதல் இடத்திலும்; பஞ்சாப் பல்கலை, 10 தங்கம், 5 வெள்ளி, 14 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் இரண்டாம் இடம்.மும்பை பல்கலை, 6 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும்; தமிழகத்தின் அண்ணா பல்கலை, 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் நான்காம் இடத்திலும்; மஹாராஷ்டிராவின் சாவித்ரிபாய் புலே பல்கலை, 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
நாளை முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு விதமாக தடகள போட்டிகள் நடப்பதால், தமிழக பல்கலைகள் மேலும் பல பதக்கங்கள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பயிற்சியில் வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.