5 மாத பெண் குழந்தையை ரூ. 1.40 லட்சத்துக்கு விற்ற தாய் -விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுற்று உவரி பகுதியில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கச் செல்வி. 42 வயதான இவருக்கு, திருமணமாகி 19 வயதிலும், 4 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து, தனியே வசித்து வந்தார் தங்கச் செல்வி. இந்நிலையில் தங்கச் செல்வி அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ராஜ லட்சிகா என பெயரிட்டதாக தெரிகிறது. குடும்ப வறுமை காரணமாகவும் ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வருத்தத்தில் இருந்த அவர், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை 5 மாதத்தில் விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டப்பனை பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திசையன்விளை அருகிலுள்ள கடக்குளத்தை சேர்ந்தவர்களான செல்வகுமார் மற்றும் சந்தன வின்சியா தம்பதியருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அவர்கள் தற்போது கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தங்கி, அங்கு குடும்பத்துடன் ஓட்டல் தொழில் நடத்தி வருகின்றனர்.
image

இவர்களிடம் பேசிய மாரியப்பன், தங்கச் செல்வியின் பெண் குழந்தை இருப்பதை அவர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள தம்பதியும், குழந்தையை வாங்கிக் கொள்ள சம்மதித்த நிலையில், இதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை தாய் தங்கச் செல்வியிடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனைக்கு கேரளாவில் உள்ள தம்பதி கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு தம்பதியை விசாரித்த மருத்துவர், குழந்தை குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார். அந்த தம்பதியும், தமிழகத்தில் இருந்து குழந்தையை விலைக்கு வாங்கியதை மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த மருத்துவர், கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் நல அமைப்பிற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்த கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர், நெல்லையில் உள்ள குழந்தை நல அலுவலருக்கு தகவல் கூறியுள்ளார்.
இதுதொடர்பான தகவல் நெல்லை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்துக்கு தெரியவந்த நிலையில் அவர்கள், போலீசார் உதவியுடன் குழந்தையை கோட்டயத்தில் இருந்து மீட்டு வந்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை விற்பனை செய்த தாய் தங்கச் செல்வி, புரோக்கர் – ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன், குழந்தையை விலைக்கு வாங்கிய கணவன் – மனைவி ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
image
மேலும் தங்கச் செல்வியின் இரண்டாவது கணவர் அர்ஜுனனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சம்மதத்தின் பேரில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பெண் சிசுவை காப்பாற்றும் வகையில் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், வறுமை காரணமாக பெண் சிசு விற்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இதுபோன்ற தம்பதிகளை ஏமாற்றி, குழந்தை விற்பனையில் ஈடுபடும் கும்பலையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்பதும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.