தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் தேர்தல்களால் ஏற்படும் விபத்துகளும். திருவிழாக்களில் நிகழந்த விபத்துகளாலும் அதிர்ச்சியில் உள்ளது அறநிலையத்துறை. குறுகிய காலத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்துக்களை அபகுசணமாக ஆன்மிக அறிஞர்கள் பார்க்க ஆரம்பித்திருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில் நடந்த தேர் பவனியில் மின்சார வயரில் தேரின் அலங்கார விளக்கு உரசித் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பதினோரு பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த அன்றே சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. உயிர்சேதம் ஏதும் இந்தத் தீ விபத்தில் ஏற்படாவிட்டாலும் அடுத்தடுத்த இந்த இரண்டு சம்பங்களால் அரசுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் காயம் இதுவரை ஆராத நிலையில் நாகப்பட்டினம் திருசெங்காட்டங்குடி கிராமத்தில் உள்ள ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று இரவு நடந்ததுள்ளது. தேர் பவனிக்கு முன்பாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தேர் பவனி வந்துகொண்டிருந்த போது, தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்கிற இளைஞர் எதிர்பாரத விதமாக தேரின் சக்கரத்தில் சிக்கி பலியானார். மின்சாரத்தினால் சிக்கல் வந்துவிடக்கூடாது என்று மின்சாரத்தை நிறுத்திய நிலையில், மற்றொரு வகையில் இந்த உயிர்சேதம் நடந்துள்ளது.
இதுமட்டுமின்றி கடந்த சிலமாதங்களுக்குள் ஆலயத்தின் தேர்திருவிழாவில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர் வந்துக்கொண்டிருந்த போதே, தேர் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பூசாரிக்குக் காயம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் தேர் ஒரு வீட்டின் பால்கனியில் மோதியதால் அங்கு நின்றுக்கொண்டிருந்த பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதே போல் திருப்பரங்குன்றத்தின் நடந்த தேரோட்டத்தில் தேர் மின்சார வயரில் உரசப் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கலில் நடந்த தேரோட்டத்தின்போது தேரின் ஒரு பகுதி மின்சார வயரில் உரசியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார் இப்படித் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தேரினால் விபத்துக்கள் ஏற்படுவதும், தேர் நிலைகுலைந்து சாய்வதும் நடந்துவருகிறது. மற்றொருபுறம் தமிழகத்தின் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காணவந்த பக்தர்கள் இருவர் மரணம் அடைந்தனர். அழகர் கோயிலிருந்து புறப்படும் முன்பே அந்தக் கோயிலில் இருந்த கண்ணாடியும் உடைந்துள்ளது. அழகரின் பயணத்தை வைத்தே அந்த ஆண்டிற்கான பல்வேறு பலன்களை ஜோதிடர்கள் கணிப்பது வழக்கம். எனவே மதுரை சித்தரைத் திருவிழாவில் நடந்த இந்த சம்பவங்களை அப்போதே நல்ல சகுணம் அல்ல என்று ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு அடுத்த தலைவலியாகத் தேரோட்ட நிகழ்வுகள் மாறியுள்ளன. ஆலயத்தின் தேர் பவனியை ராஜ்யத்தின் செழுமையோடு ஒப்பிடுவது பண்டைய காலத்தில் இருந்துள்ளது.
தேரோட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று பண்டைய காலத்தில் யாகங்கள் எல்லாம் நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள் ஜோதிடர்கள். தேரோட்டத்தில் ஏற்படும் சிக்கல்களால் தனது துறைக்குள் ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறாராம் துறை அமைச்சர் சேகர்பாபு. தி.மு.க வின் அடிநாதம் பகுத்தறிவாக இருந்தாலும் அந்தக் கட்சியில் உள்ள பலரும் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள். அதிலும் சேகர்பாபு ஆன்மிகத்தில் அதீத நாட்டம் கொண்டவர். எனவே தஞ்சாவூரில் நடந்த தேர் விபத்து சம்பவத்திற்குப் பிறகு தனக்கு நெருக்கமான இரண்டு ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்துள்ளார். அப்போது அவர்கள் “தேரோட்டத்தில் உயிர்பலி வாங்குவது அந்த ராஜ்யத்திற்கு நல்லதல்ல. அதேநேரம் தஞ்சாவூரில் நடந்த விபத்தை ராஜ்யத்தோடு பொறுத்தமுடியாது. அது தனியார் மடத்திற்கு சொந்தமான தேர். இருந்தாலும் தமிழகத்தில் நடந்த பிற தேர்விபத்துக்களை ஆராய்ந்து பரிகாரம் செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும், இந்தத் தேரோட்டச் சிக்கல் ஒருபுறம் நடந்துவரும் நிலையில் சேகர்பாபுவின் குடும்பத்திற்குள் ஒரு சில சிக்கல்கள் எழுந்தன. துறையைத் தன் வசம்வைத்திருப்பாதாலே இந்த சிக்கல்கள் எல்லாம் தனக்கு வருகிறதோ என்கிற ரீதியில் சேகர்பாபு யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நாகப்பட்டினம் தேரோட்டத்தில் நடந்த உயிர்ப்பலிக்குப் பிறகு அறநிலையத்துறையில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரி மூலம் நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல தாந்தரீக நிபுணர் ஒருவரிடம் சேகர்பாபு தரப்பு சந்திக்க நேரம் கேட்டுள்ளது. இந்தத் தாந்தரீக சாமியார் ஏற்கெனவே ஜெயலலிதாவிற்கு நெருக்கமானராக இருந்தவர் என்பதாலும், இப்போது தி.மு.கவில் உள்ள சில அமைச்சர்களுக்கு தாந்தரீக முறையில் பரிகாரம் செய்துகொடுத்திருப்பதையும் சேகர்பாபுவிடம் சிலர் சொல்ல, ஜோதிடர்களை பார்ப்பதைவிட தாந்தரீகத்தின் மூலம் இந்த விபத்துக்களுக்கான காரணத்தை அறிய சேகர்பாபு தரப்பு திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் ஜோதிடர்களும் ஆட்சியின் தலைமைக்கு நெருக்கமானர்களிடம் “தேர் விபத்துக்களை எளிதாகக் கடந்து செல்ல வேண்டாம். உரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது. தேர்ச்சக்கரத்தில் உயிர் பலி வாங்கியதற்கு, கண்டிப்பாக பரிகாரம் செய்தாக வேண்டும்” என்று ஆலோசனை கொடுத்துள்ளார்கள். பகுத்தறிவாக தி.மு.க உள்ள தலைவர்கள் செயல்பட்டாலும், இந்தத் தொடர் விபத்துக்கள் அவர்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.