கிவ்:
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:
என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம்.
நான் ரஷியாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது. என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல அல்லது பிடிப்பதற்காக ரஷிய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
இதற்கிடையே ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையின் போது தாக்குதல் நடத்தியதை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.