நெல்லை அருகே 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்ய, பள்ளி மேலாண்மை குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், பாப்பாக்குடி பகுதியை செல்வ சூர்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே, கையில் ஜாதி ரீதியான கயிறு கட்டுவது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.
இதில், மாணவன் செல்வ சூர்யா காதில் ரத்தம் வந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாணவன் செல்வா சூர்யா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தலைமறைவான 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி மாணவன் செல்வ சூர்யா உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த ஆய்வில் பள்ளி மாணவர்களின் ஒழுங்கீனம் மற்றும் ஜாதி ரீதியாக மாணவர்கள் செயல்படுகிறார்களா என்பது குறித்து விசாரணை செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.