சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 35 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியராக இருந்த பிரபு, கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விசாரணையில் கிரெடிட் கார்டு மூலமாக 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றும், வீடு கட்ட அவரது தந்தை கொடுத்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வைத்தும் ஆன்லைனில் ரம்மி விளையாடிய பிரபு, அதில் 35 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தது தெரியவந்ததது.
மேலும், கடனை செலுத்தக்கூறி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததால் பிரபு தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.