இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்- தமிழக கவர்னர் மே தின வாழ்த்து

சென்னை:

தமிழக கவர்னர் என்.ரவி வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் கூறி இருப்பதாவது:

சர்வதேச தொழிலாளர் தினம் என்று அழைக்கப்படும் இந்த மே தினத்தில், தமிழ் நாட்டைச் சார்ந்த உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமுதாயத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நாட்டிற்கான புகழ்பெற்ற சேவைகளுக்காக உழைக்கும் சக்திகளின் தனித்துவமான பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் உகந்த நாள் இதுவாகும்.

நமது தேசம் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், நமது தேசத்தை வலுவாகவும், வளமானதாகவும் கட்டியெழுப்புவதில் நமது எண்ணற்ற தொழிலாளர்கள் உறுதியுடன் அயராது கடினமாக உழைப்பதற்காக அவர்களை வணங்கி கண்ணியப்படுத்துகிறோம். உழைக்கும் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடின உழைப்பை ஊக்குவிப்பதற்கும் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

அமிர்த சகாப்தம் எனப்படும் அடுத்த 25 ஆண்டுகளில் நமது இந்தியா விரைவான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதை உறுதி செய்வதற்காக, புதிய சாத்தியமான யோசனைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களுடன் தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கிட இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதி ஏற்போம். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்திய தேசம் உலகத் தலைவராக வெளிப்படும், அதே நேரத்தில் இந்தியா தனது விடுதலையின் 100 வது ஆண்டைக் கொண்டாடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.