சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சமூக ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டுமென விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு இதனை கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடும் மக்களும் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக, நாட்டில் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் (IFI) வலியுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஏப்ரல் 18-22ம் திகதி வரையான காலப்பகுதியில் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் 2022 வசந்தகால கூட்டங்களில் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
வாஷிங்டனில் தங்கியிருந்த போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், இருதரப்பு பங்காளிகளுடனும் தூதுக்குழு சந்திப்புகளை நடத்தியது.
இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமை மற்றும் உடனடி, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், முதலாவது பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் இலங்கை விவகாரங்களை மேற்பார்வையிடும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப மட்டத்தில் உள்ள ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை இக்குழுவினர் சந்தித்தனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.