அகமதாபாத்: ஈரானில் இருந்து குஜராத் வந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதற்குள் திரவ வடிவில் 90 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பிபாவாவ் துறைமுகத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக குஜராத் சிறப்பு புலனாய்வு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு உரிய கன்டெய்னரில் சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.450 கோடி என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், ‘ஈரானில் இருந்து வந்த ஷிப்பின்ட் கன்டெய்னரில் இருந்து சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. கடத்தி வரப்பட்ட ஹெராயினை, திரவ வடிவில் கெட்டியான கயிறுகளில் மறைத்து வைத்திருந்தனர். கிட்டத்தட்ட 395 கிலோ கயிற்றில், சுமார் 90 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கயிறுகள் என்பதால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்ற அடிப்படையில் கடத்தி வந்துள்ளனர்’ என்றார். பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் வழியாக போதைப்பொருளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள, தற்போது குஜராத் வழியாக போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். சமீபத்தில் குஜராத் கடற்கரைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.