சென்னை மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சென்னை மாநகரட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், மடுவின்கரை சென்னை மேல்நிலைப் பள்ளியில் டெமனாஸ் (TEMENOS) எனும் மென்பொருள் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு (C.S.R) திட்ட நிதியின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இந்த கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தில் 20 கணினிகள், இருக்கைகளுடன் கூடிய 4 கலந்தாய்வு மேஜைகள், திரையுடன் கூடிய ஒளிவீச்சு (Projector), கம்பள விரிப்புடன் கூடிய தரை அமைப்பு. அலங்கார மேற்கூரை, சுவரெங்கும் பெண் கல்வி மற்றும் கலைகள் குறித்து தீட்டப்பட்ட ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கணினி ஆய்வகம் டெமனாஸ் நிறுவனத்தின் Adopt-IT என்கின்ற திட்டத்தின் மூலம் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 உயர்நிலைப் பள்ளிகளும், 38 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மிக வள வகுப்பறைகள் (Hi-Tech) அமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் CITIIS திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 மாநகராட்சி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் CSR நிதியின் கீழ் பல்வேறு வகையான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிட் தடுப்பூசியானது தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக CSR நிதியில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று டெமனாஸ் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட கணினி மையத்தை இரண்டு நாட்களுக்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மடுவின்கரை மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தில் 5 முதல் 11 வயது உடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி உடனடியாக செலுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.