பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தி :
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமை பிரகடன நாளான மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு எனது உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் மறைமுகமாக மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது நேரடியாகவே மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் நலன்களை விட முதலாளிகளின் நலன் தான் முக்கியம்; பெரு நிறுவனங்கள் செழித்தால் தான் தொழிலாளர்கள் சம்பளம் வாங்க முடியும் என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இது பாட்டாளிகளை பாட்டாளிகளாகவே வைத்திருப்பதற்கான தந்திரமும், சதியுமாகும்.
பாட்டாளிகளே நீங்கள் போராடாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. இதை உணர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை பாட்டாளிகள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.