கீவ்: “என்னையும் எனது குடும்பத்தாரையும் கொலை செய்யும் வகையில் கீவ் நகருக்குள் ரஷ்ய அதிரடிப் படையினர் பாராசூட் மூலம் இறங்கினர். அன்றய இரவு எங்களைப் பாதுகாக்க ராணுவம் மேற்கொண்ட முயற்சியெல்லாம் அதற்கு முன்னால் நான் சினிமாவில் மட்டுமே பார்த்திருந்தேன்” என்று அந்நாட்டு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 2 மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் ஒரு வாரத்திலேயே வீழும் என்று பேசப்பட்ட நிலையில், அமெரிக்காவின் இடைவிடாத ராணுவ உபகரண உதவியால் 2 மாதங்களைக் கடந்தும் போர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டைம் பத்திரிகைக்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “போர் தொடங்கியதிலிருந்து என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்றால் அது முதல் நாள் நடந்த சம்பவங்கள் தான். பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ரஷ்யா ராணுவ தாக்குதலைத் தொடங்கியது என்ற தகவலை அறிந்தேன். நானும் எனது மனைவி ஒலீனா ஜெலன்ஸ்காவும் 17 வயது மகளும், 9 வயது மகனும் போர் செய்திக்கு கண் விழித்தோம். அப்போது குண்டு சத்தங்களைக் கேட்க முடிந்தது. எல்லா இடங்களிலும் தாக்குதல் தொடங்கியிருந்தது. சிறிது நேரத்திலேயே ரஷ்யப் படைகள் என்னையும், எனது குடும்பத்தினரையும் நெருங்குவதாக தகவல் வந்தது. கீவ் நகருக்குள் ரஷ்ய அதிரடிப் படையினர் பாராசூட் மூலம் குதித்து இறங்கியுள்ளனர் என்ற தகவல் வந்தது.
என்னை உயிருடனோ அல்லது கொலை செய்தோ வீழ்த்த அவர்களுக்கு உத்தரவு இருப்பதாகக் கூறப்பட்டது. அதிபர் மாளிகை பாதுகாப்பானது இல்லை என்று நாங்கள் பத்திரப்படுத்தப்பட்டோம். எங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டது. அதிபர் மாளிகை வாயிலில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய இரவு வரை இவை எல்லாவற்றையும் நான் சினிமாவில் மட்டுமே பார்த்திருந்தேன். மாளிகையின் விளக்குகள் முற்றிலுமாக அணைக்கப்பட்டன. நாங்கள் இருளில் உள்ளே அமர்ந்திருந்தோம். இரண்டு முறை வாயிலை தகர்க்க ரஷ்யப் படைகள் முயன்றதாக தகவல் வந்தது என்று கூறியுள்ளார்.
உலகளவில் உக்ரைன் அதிபரின் துணிச்சல் இன்றளவும் பாராட்டு பெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு வருமாறு அந்நாடு அழைப்பு விடுத்தும் அதை ஜெலன்ஸ்கி புறக்கணித்தார். இறுதிவரை நாட்டிலிருந்தே சவால்களை எதிர்கொள்வேன் என்று அவர் கூறினார்.