உணவு தேவை என்பது தவிர்க்கமுடியாத ஒன்று வாழ்க்கைக்கு. குறிப்பாக கோடைக்காலங்களில் உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குளிர்காலங்களில் உண்ணும் உணவிற்கும் கோடைகாலங்களில் உண்ணக்கூடிய உணவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
கடும் வெயிலின் தாக்கத்தால் நீர் ஆகாரங்களையே நாம் அதிக அளவு உட்கொள்கிறோம். அந்த வகையில் சிறுதானிய உணவாகவும், இயற்கை உணவாகவும் நம்முடைய உடலை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் ஒன்றாக கூழ் இருக்கிறது. அதிகமாக கிராமப்புறங்களில் மட்டுமே கூழ் விற்கப்பட்டு வந்தநிலையில் இப்போது நகரங்களிலும் கூழ்க்கடைகள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
’’திருக்கோயிலூர் கள்ளக்குறிச்சி ரோட்டுல கூழ்க்கடை வச்சிருக்கேன். என் பேரு சத்யா. எனக்கு வயசு இருபத்தி ஒன்பது ஆகுது. ஏழு வருஷமா இதே திருக்கோயிலூர்லதான் கூழ்க்கடை வச்சிருக்கேன். முதல்ல வேறு எந்த வழியும் தெரியல. சரி இட்லி கடை வைக்கலாம் அப்படின்னு பார்த்தா அதுக்கு ரொம்ப முதல் போடணும். நம்மனால அது முடியாது. அதனால தான் கூழ்க்கடைய ஆரம்பிச்சேன். நான் இல்லன்னா எங்க வீட்டுக்காரர் இந்த கடையை நடத்துவாரு. ஒரு நாளைக்கு 50 சொம்பு வரைக்கும் விக்கும். ஒரு சொம்பு 15 ரூபாய். சந்தையில் கடை போட்டா 100 சொம்பு வரைக்கும் விக்கும்.
வாரத்துக்கு ஒருநாள் தான் சந்தை நடக்கும். ஒரு கிலோ கம்பு 60 ரூபாய். ஒரு கிலோ கேழ்வரகு 100 ரூபாய். 2 கிலோ கம்பு, 2 கிலோ கேழ்வரகை ஊறவச்சு உரல்ல போட்டு நல்லா இடிச்சி ராத்திரி முழுக்க புளிக்க வைக்கணும். காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு நல்ல பொங்கி ஆறவச்சிட்டு கடைக்கு கொண்டு வரணும். வெறுமனே கொடுக்க முடியாது. அதுகூட மோர் கலந்து, வெங்காயம் அரிஞ்சு போட்டு ஒரு சொம்பு குடுத்தன்னா குடிச்சிட்டு வயிறார வாழ்த்துவாங்க. பசி தாங்க எல்லாருக்கும் ரொம்ப முக்கியம். அதை போக்கறமே அப்படிங்கறது எங்களபோலவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. காசு பணம் எல்லாம் முக்கியம் கிடையாது. பசிக்கும்போது அவங்களுக்கு ஒரு சொம்பு கூழ் கொடுக்கும்போது நமக்கு கிடைக்கும் சந்தோஷமே வேறங்க.
இப்படித்தாங்க தினமும் நாள் ஓடுது. கூழ் உணவு உடம்புக்கு ரொம்ப நல்லது கூழ் மட்டுமில்ல; அதுகூட சேர்ந்து சாப்பிடுற வெங்காயம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இப்படித்தான் பார்த்து பார்த்து வர்றவுங்களுக்கு நாங்க கூழ் கொடுப்போம். நிறைய பேரு சர்க்கரை நோய்க்கு கூழ் நல்ல உணவுன்னு வாங்கி குடிப்பாங்க. அப்ப நான் எங்களை மாதிரியான ஆட்களை மருத்துவரா நினைச்சுக்குவேன். ஒரு நாளைக்கு 30 ரூபாயில் இருந்து 80 ரூபா வரைக்கும் இந்த தள்ளுவண்டி வாடகை கொடுப்போம். எல்லாத்தையும் கணக்குப்பன்னினா ஒரு முன்னூறு ரூபா மிஞ்சும். இதுதாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செஞ்சா கிடைக்கிற கூலி.
சரி யாருக்கோ உணவு கொடுக்கிறோம்ன்னு சந்தோஷப்பட்டுகிட்டு அப்படியே காலத்தை ஓடிக்கிட்டு இருக்கோங்க. இருந்தாலும் பேங்கில் கடன் அடைக்க முடியலயேன்னு ஒரு மனவருத்தம் இருந்துகிட்டே தான் இருக்குது. நாங்க யாரையும் ஏமாத்த நினைக்கலேங்க. ஏதோ ஒரு வகையில உணவு கொடுத்து விடுகிறோம் அப்படிங்கற நிம்மதி தினமும் தூங்கும்போது இருந்துகிட்டுத்தான் இருக்கு’’ என்கிறார் சத்யா.
உணவு நமக்கு மிக முக்கியமாக ஒன்றாக இருந்து வருகிறது. இதுபோன்ற எளிய மனிதர்கள் கொடுக்கிற எளிய உணவுகள் நமக்கு சாதகமாக இருந்தாலும் கூட அவர்களுடைய அன்றாட வாழ்க்கையையும் நினைக்கத் தோன்றுகிறது.
முந்தைய அத்தியாயத்தை படிக்க… எளியோரின் வலிமைக் கதைகள்-27: “பொருட்கள் விற்கலைனா வாங்கிய கடன்தான் கண்முன்னே வரும்”
– ஜோதி நரசிம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM