`ஒரு உயிர் போனாதான் அரசு நடவடிக்கை எடுக்குமா?' – பள்ளி அருகே வாய்க்கால் கட்டும் பணியில் அலட்சியம்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் `கழிவு நீர் வாய்க்காலா அல்லது உயிரைக் காவு வாங்கப்போகும் வாய்க்காலா’ என்ற தலைப்பில் நீண்ட பதிவொன்றை எழுதியிருந்தார்.

அந்தப் பதிவில், `சென்னை சாலிகிராமத்திலிருந்து கோயம்பேட்டுக்குச் செல்ல முக்கியமான வழி விநாயகா தெரு. வெங்கடேசன் நகரின் ஒரு பகுதி. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கார், பைக், சைக்கிள் வாகனங்களிலும், நடந்தும் செல்லும் சாலை அது. அந்தச் சாலையின் மையப்பகுதியில் இருப்பது கிளாரன்ஸ் மெட்ரிக் பள்ளி! தினமும் நூற்றுக்கணக்கான விபரம் தெரியாத அப்பாவி மாணவர்கள் அந்த ஆபத்தைக் கடந்து செல்கிறார்கள்! அந்தச் சாலையின் ஓரமாக, பள்ளிக்கு முன்பாக டிரெய்னேஜ் வாய்க்கால் கட்டும் வேலை நடைபெறுகிறது.

நல்லது!

சில நூறு வருடங்களுக்கு முன்வரையிலும் ஏதாவது புதிதாகக் கட்டினால் நரபலி கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்போது மறைமுகமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு.

இந்த டிரெய்னேஜ் வாய்க்கால் கட்டுவதற்காக நரபலி கொடுக்கும் திட்டமோ இது?

டிரெய்னேஜ் வாய்க்காலுக்குக் கான்கிரீட் போட்டபின் ஆங்காங்கே கம்பிகள் ஒரு அடி, ஒன்றரை அடி உயரத்துக்கு நீட்டிக்கொண்டிருக்கின்றன. லேசாகச் சறுக்கி விழுந்தாலே போதும்… நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள் நெஞ்சு, வயிறு என்று குத்தி சாகடித்துவிடும். கண்ணுக்கு முன் அந்த அபாயம் இருக்கிறது.

அதைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை. அங்கு வேலை செய்த ஆளிடம் காண்டிராக்டர் பற்றிக் கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. சைட் இஞ்சிணீயர் பற்றிக் கேட்டேன், சுத்தம்!

எனவே, நேற்று புகைப்படம் எடுத்து கார்ப்பரேஷன் கமிசனர், இன்ஜினீயர், இந்தப் பகுதி அலுவலர் ஆகியோருக்கு மெயில் அனுப்பினேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நம் முதலமைச்சருக்கு ட்வீட் செய்தேன். பார்வைக்குச் சென்றதா என்று தெரியவில்லை.

இயக்குநர் கஸாலி

– அங்கு பொறுப்பிலிருக்கும் இன்ஜினீயர் என்ன செய்கிறார்?

– கான்டிராக்டர் தன் வீட்டின் முன் அப்படி விட்டு வைத்துத் தன் மகன்/மகள் தவறி விழுந்து சாகட்டும் என்று அலட்சியமாக இருப்பாரா?

– சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? சம்பளமாகவும், லஞ்சமாகவும் பணம் வந்தால் போதும் என்று இருக்கிறார்களா?

– கிளாரன்ஸ் பள்ளியை நடத்துபவருக்குப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் இதைப் பார்த்து, உடனடியாகப் புகார் கொடுத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பார். போட்டி போட்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வாங்கினால் போதும் என்று நினைத்துவிட்டாரோ?

– தினமும் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த ஆபத்தான கம்பிகளைத் தாண்டிச் செல்கிறார்களே, யாராவது சறுக்கி விழுந்து உயிரை விட்டால் யார் பதில் சொல்வது?

அல்லது இதுபோன்ற ஆபத்தான கம்பிகளுக்கு வெளியே பாதுகாப்புப் பலகை வைக்க ஓர் உயிர் தேவைப்படுகிறதா?

சில வாரங்களுக்கு முன்புதான் காது கேட்காத டிரைவரை வைத்து ஒரு 7 வயது சிறுவனை ஒரு பள்ளி கொன்றது. இப்போது தங்கள் பள்ளிக்கு இருபுறமும் அலட்சியமாக விடப்பட்டிருக்கும் கம்பிகளால் அந்த கிளாரன்ஸ் பள்ளியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனின் உயிரைப் பறிக்கப் போகிறார்களா?

அலட்சியம்… அது ஒரு பெரிய வியாதி! மறதி… நம் முட்டாள்தனத்தின் சாட்சி!

பார்ப்போம்… உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா அல்லது யாராவது சாகும்வரை காத்திருந்து வேடிக்கை பார்க்கப்போகிறார்களா?’ எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநரின் இந்தப் பதிவைப் படித்ததும், அவருடைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்றோம். அவர் பதிவிலிருந்த அத்தனை வரிகளும் உண்மையே… உடனே புகைப்படமும் வீடியோவும் எடுக்க ஆரம்பித்தோம். பதற்றமுடன் ஓடி வந்த சில இளைஞர்கள், தங்களுடைய ஓனர்தான் இந்த வேலையின் ஒப்பந்தக்காரர் என்றனர். அவர்களிடம், பேரி கார்ட் இல்லாதது, குழிகள் திறந்துகிடப்பது, கம்பிகள் மேல் நோக்கி நீண்டிருப்பது, டேன்ஜர் ஸோன் டேப் இல்லாதது ஏன் என்று கேள்விகள் எழுப்பினோம். ஓர் இளைஞர் மட்டும் முன்வந்து, “இந்த வேலை முடியற வரைக்கும் இந்த ரோட்டை ஒன்வே ஆக்கணும்னு கேட்டிருந்தோம். ஆனா, பேரி கார்ட் வெச்சா டூ வீலர்காரங்க அதை நகர்த்திட்டு வந்துடுறாங்க. அவங்க பின்னாடியே ஆட்டோ, கார்னு எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. வண்டிங்க எந்நேரமும் போயிட்டு வந்துட்டு இருக்கிறதால, நைட்ல மட்டும்தான் வேலை செய்ய முடியுது. கம்பி நீட்டிட்டு இருக்கிறது கழிவுநீர் கால்வாயோட தொடர்ச்சிக்காக விட்டு வெச்சிருக்கோம். அந்தக் குழியெல்லாம் கழிவுநீர் கால்வாயை எளிமையா சுத்தப்படுத்துறதுக்கான ஓப்பன். எல்லாத்தையும் இன்னும் ரெண்டு, மூணு நாள்ல சரி பண்ணி மூடிடுவோம்” என்றார் பதற்றமாக.

பள்ளியருகே பள்ளம்

நாம் அங்கிருந்து கிளம்புகையில், `டேய் அந்த டேன்ஜர் ஸோன் டேப்பை கொண்டு வாங்கடா’ என்கிற குரல் பின்னணியில் ஒலித்தது. (ஆனால், இன்று காலைவரை (30.04.22) டேன்ஜர் ஸோன் டேப்பால் அந்தப் பகுதி பாதுகாக்கப்படவில்லை) அடுத்து இயக்குநர் கஸாலியின் அலுவலகத்துக்குச் சென்றோம்.

“ஆமாங்க, தினந்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் புழங்குற தெரு அது. அந்தத் தெருவுல ஒரு பள்ளிக்கூடமும் இருக்கு. மாணவர்கள் விளையாட்டுத்தனமா ஓடிவந்து பள்ளத்துல விழுந்துட்டாங்கன்னா… விழுற வேகத்துல அவங்க நெஞ்சுல, வயித்துல கம்பிக் குத்திடுச்சுன்னா… ரொம்ப பதற்றமா இருந்துச்சு. அதனாலதான், உடனே முதலமைச்சருக்கு ட்வீட் பண்ணேன். மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங்பேடி அவர்களுக்கும் மெயில் செஞ்சேன். இன்னும் எந்தப் பதிலும் வரலை. நல்லவேளை, நீங்க வந்துட்டீங்க” என்றார் திருப்தியுடன்.

மேல் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளும் குழிகளும்…

இந்த பிரச்னை தொடர்பாகவும், கஸாலியின் மின்னஞ்சல் தொடர்பாகவும் பேசுவதற்கு மாநகராட்சி ஆணைய சுகன் தீப் சிங் பேடி அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றோம். வாட்ஸ்அப் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறோம். அவர் இன்னும் நம்மிடம் பேசவில்லை.

எந்த அசம்பாவிதமும் நிகழ்வதற்குள் இயக்குநர் கஸாலி குறிப்பிட்ட தெருவின் பிரச்னை தீர வேண்டுமென்பது மட்டுமே விகடனின் நோக்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.