ஓசூரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோதே மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்சார ஸ்கூட்டரை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று அவர் அலுவலகத்துக்கு மின்சார ஸ்கூட்டரில் சென்றார். ஜூஜூவாடி அருகே சென்றபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சதீஷ், வாகனத்தை நிறுத்துவிட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், வாகனம் தீக்கிரையானது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதால் அதனை பயன்படுத்துவோர் அச்சத்தில் உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM