உங்களுக்கு அவசரமாக கடன் தேவைப்படுகிறது. வங்கிகள், கந்து வட்டிக்காரர்கள் மூலம் வாங்குவதற்கு பதில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலேயே அந்த வசதி இருக்கிறது. கூகிள் பிளே ஸ்டோரில் போனால் நூற்றுக்கணக்கான கடன் வழங்கும் செயலிகள் காத்திருக்கிறது. ஒரிரு நிமிட செயல்முறையில் உங்களுக்கு கடன் கிடைத்து விடுகிறது. எங்கேயும் அலையாமல் உங்கள் கைகளுக்கு பணம் அதாவது கடன் வந்து சேர்கிறது. நல்லது. விசயம் அத்தோடு முடியவில்லை. இந்த கடன் வழங்கும் செயலிகள் மூலம் இந்தியாவில் பெரும் மோசடியே நடந்து வருகிறது. நீங்களும் அதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ரிச் கேஷ் செயலியிடம் ஏமாந்த ஜாபர் கானின் கதை
26 வயதான ஜாபர் கானுக்கு, அவரது மனைவி ஷஃபியின் பிரசவத்திற்காக மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. மும்பையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனேவில் வசிக்கும் கான், ரிச் கேஷ் என்ற மொபைல் செயலியைப் பற்றி ஒரு நண்பரிடம் கேள்விப்பட்டுள்ளார்.
“நான் எனது வங்கி விவரங்களை [ஆப்பில்] பகிர்ந்து கொண்டேன் மற்றும் 5,000 ரூபாய் கடனுக்கு விண்ணப்பித்தேன்” என்று கான் கூறினார்.
ஆனால் ஒரு வாரம் கழித்து கான் தனது கடனைத் திருப்பிச் செலுத்தச் சென்றபோது, அவரது தொலைபேசியிலோ அல்லது கூகிள் பிளே ஸ்டோரிலோ எங்கும் செயலியைக் காணவில்லை. திடீரென அந்த செயலி காணாமல் போய்விட்டது.
பின்னர், ஒரு சிலவாரங்கள் கழித்து ரிச் கேஷின் ஏஜென்ட் எனக் கூறிக் கொண்ட ஒருவர், கான் வாங்கிய கடனுக்கு வட்டியோடு 10,000 ரூபாய் கேட்டார். வாங்கிய தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். பணம் கொடுக்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த முகவர், கானை மிரட்டினார். கான் தன்னிடம் பணம் இல்லை என்று அந்த நபருக்கு போனில் தெரிவித்தார்.
மறுநாள் காலை ஒரு நண்பர், கானுக்கு போன் செய்து, அவரைப் பற்றிய சில அந்தரங்க புகைப்படங்கள் தனக்கு ஏதோ ஒரு போனில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். என்ன நடந்தது? ரிச் கேஷ் எனும் அந்த செயலியை நடத்துபவர்கள் கானின் ஃபோனை ஹேக் செய்திருக்கிறார்கள். பிறகு கானின் வாட்ஸ்அப் கணக்கில் உள்ள தொடர்புகளுக்கு அவரது தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்கள். தனது அந்தரங்கம் பொதுவெளிக்கு பரவுவதைக் கண்டு பீதியடைந்த கான் விரைவாக 7,350 ரூபாயை ஏற்பாடு செய்து அந்த ரிச் கேஷ் ஏஜெண்டிடம் செலுத்தினார். அதன் பிறகு அந்த ஏஜெண்ட் இனி மிரட்ட மாட்டேன் பிரச்சினை முடிந்தது என்று கூறியிருக்கிறார்.
டிஜிட்டல் மோசடி
ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, மற்றொரு நபர், ரிச் கேஷ் ஏஜென்ட் என்று கூறி, கானிடம் 10,000 ரூபாய் அதிரடியாக கேட்டார். தரவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அச்சுறுத்தினார். கான் தான் ஏற்கனவே பணம் திருப்பியதை விளக்க முற்பட்டார். ஆனால் அந்த மிரட்டல் ஏஜெண்டோ மீண்டும் கானின் தொடர்புகளுக்கு அவரது அந்தரங்கள படங்களை அனுப்ப ஆரம்பித்தார். போலீசில் புகார் அளித்தாலும் பயப்படமாட்டேன் என்று அந்த ஏஜெண்ட் சவால் விட்டார்.
இவ்வளவிற்கும் கான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். ஏமாந்தது போதம் என்று புனே சைபர் காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனால் போலீசால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
ஷார்ப் லோன் செயலியிடம் மாட்டிய சோனாலி
35 வயதான சோனாலி மஞ்சரேயும் இதேபோன்ற புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். மார்ச் மாதம், மஞ்சரே தனது பாட்டியின் இறுதிச் சடங்குகளுக்காக, ஷார்ப் லோன் எனப்படும் விரைவான கடன் வழங்கும் செயலியில் 5,000 ரூபாய் கடன் வாங்கினார். ஃபோன்பே – PhonePe என்ற பேமெண்ட் ஆப்ஸைப் பயன்படுத்தி, சில நாட்களுக்குள் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தினார்.
இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, ஒரு முகவர் சோனாலியை அழைத்தார். ஷார்ப் லோன் எனும் செயலிக்கு பணம் வரவில்லை என்று பொய் கூறினார். சோனாலி பணம் செலுத்தவில்லை என்றால் அந்தப் பெண்ணைப் பற்றி அவருடைய ஃபோன் தொடர்புகள் எல்லாரிடமும் சொல்லி பெயரை நாறடிப்பேன் என்று மிரட்டினார்.
தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரியும் சோனாலி வேறு வழியின்றி இந்த மிரட்டலுக்கு பயந்து, இரட்டிப்புத் தொகையைச் செலுத்தி முடித்தார்.
வருடந்தோறும் மோசடி கடன் செயலிகளால் ஏமாறுபவர்கள் அதிகரிக்கிறார்கள்
2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் புனேவில் உள்ள சைபர் காவல் நிலையத்திற்கு இது போன்ற டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் மூலம் 700க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டது குறித்தும் மிரட்டப்பட்டது குறித்தும் புகார் அளித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இதுபோன்ற சுமார் 900 புகார்கள் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் நவம்பர் 2021 அறிக்கையின்படி, டிஜிட்டல் கடன் வழங்குதல் 2017 முதல் 2020 வரை 12 மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த கவலைகளைத் தொடர்ந்து, நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக
ரிசர்வ் வங்கி
ஆய்வு செய்தது. அதன்படி ஜனவரி 2021 இல் “ஆன்லைன் தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் கடன் வழங்குவது உட்பட டிஜிட்டல் கடன்” குறித்த அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டது.
வங்கிகளைத் தவிர்த்து கடன் செயலிகளுக்கு மக்கள் ஏன் போகிறார்கள்?
பெரும்பாலான இந்தியர்கள் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு தகுதி கொண்டவர்களாகவோ அதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பதோ இல்லை. மேலும் வங்கியில் கடன் பெறும் முறை சாதாரண மக்களைப் பொறுத்த வரை பெரும் சிக்கலகாவும், நீண்ட நெடிய வழிமுறை கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் வங்கி கடன் குறித்து ஒரு தவறான புரிதலும் மக்களுக்கு உள்ளது.
சட்டப்பூர்வ நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறத் தகுதியுள்ள 22 கோடி இந்தியர்களில், 33% பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது. “வங்கிகளில் இருந்து கடனுக்கு ஒப்புதல் பெறுவதற்கு நேரம் எடுக்கும். பலருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை, அல்லது கணக்குகள் செயல்பாட்டில் இல்லை,” என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
“படிக்காதவர்கள் வங்கிகளில் கடன் விண்ணப்பங்களை எழுதி கடன் வாங்கும் வழிமுறையை முடிப்பது கடினம். இதனால் அவசரத்திற்கு கடன் தேவைப்படுபவர்கள், கடன் வழங்கும் தனி நபர்களை நோக்கி செல்கிறார்கள். இந்த இடத்தில் ஸ்மார்ட் ஃபோனின் கடன் வழங்கும் செயலிகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஈர்க்கின்றன.
சட்டபூர்வ கடன் செயலிகளும், சட்ட விரோத கடன் செயலிகளும்
கடந்த ஏழு ஆண்டுகளில், தானி, நவி, பேமி இந்தியா மற்றும் இந்தியா லெண்ட்ஸ் போன்ற சட்டப்பூர்வ மொபைல் லெண்டிங் பயன்பாடுகள் செயல்பட்டு வருகின்றன. “200 முதல் 500 மொபைல் லெண்டிங் ஆப்ஸ் அல்லது ஸ்டார்ட்அப்கள் உள்ளன. ஒவ்வொரு செயலி நிறுவனமும் சில லட்சம் ரூபாய் முதல் பத்து கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரையில் பணம் வைத்துள்ளன,” என்று நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டமைப்பான கேஷ்லெஸ் கன்ஸ்யூமரின் அமைப்பாளர் ஸ்ரீகாந்த் கூறினார். இந்த செயலிகள் 500 ரூபாய் முதல் சில லட்சம் வரை கடன்களை மக்களுக்கு வழங்குகிறது.
டிஜிட்டல் மோசடி
ஆனால் சட்டப்பூர்வ மொபைல் லெண்டிங் துறையின் எழுச்சி, ரிச் கேஷ், கேஷ் ஃபிஷ், பெஸ்ட் பைசா, ஸ்பீட் லோன் மற்றும் ஹேப்பி வாலட் போன்ற மோசடி செயலிகளின் தோற்றத்தையும் ஊக்கப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணிக்குழு அறிக்கையின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி 2021 க்கு இடையில், இந்தியாவில் கிடைக்கும் 1,100 டிஜிட்டல் லெண்டிங் ஆப்களில் கிட்டத்தட்ட பாதியளவு சட்டவிரோதமானவை.
ரிசர்வ் வங்கியில் புகார்களை பதிவு செய்வதற்காக Sachet எனும் இணைய தளத்தை வைத்திருக்கிறார்கள். அதில் ஜனவரி 2020 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில் இந்த மோசடி செயலி நிறுவனங்கள் குறித்த 2,562 புகார்கள் பதிவாகியுள்ளன. கூகுள் பிளே ஸ்டோர் இது போன்ற 205 மோசடி ஆப்புகளை நவம்பர் 2021இல் நீக்கியுள்ளது.
டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான 1,000 மொபைல் லெண்டிங் செயலிகளை “கேஷ்லெஸ் கன்ஸ்யூமர் – Cashless Consumer” அமைப்பு ஆய்வு செய்தது. அதன் படி, சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான ஷெல் நிறுவனங்களால் பல போலி கடன் வழங்கும் செயலிகள் இயக்கப்படுகின்றன.
இந்த செயலிகள் ( Apps) சில மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து மறைந்து பின்னர் வெவ்வேறு பெயர்களில் வெளிவருகின்றன. கேஷ்லெஸ் கன்ஸ்யூமர் அமைப்பாளர் ஸ்ரீகாந்த் “முன்பு, அவர்கள் குறை தீர்க்கும் வாடிக்கையாளர் அழைப்பு மையங்களை நடத்துவார்கள். இப்போது அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் எண்களை வழங்குகிறார்கள், இதனால் போலீசார் அழைப்புகள் அல்லது உரையாடல்களைக் கண்காணிக்க முடியாது, ”என்று கூறுகிறார். இதனால் இந்த மோசடி செயலி நிறுவனங்களை காவல்துறையால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தமது புகார்களை அரிதாகவே பதிவு செய்கின்றனர். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த தொகையை மீட்பதில் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்றனர். இதனால் போலீசோ அல்லது ரிசர்வ் வங்கியோ நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. மக்களுக்கும் இவர்கள் தமது பணத்தை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
என்னதான் தீர்வு?
இந்திய ரிசர்வ் வங்கி இந்த மோசடி செயலிகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல இந்தியா முழுவதும் உள்ள சைபர் காவல் நிலையங்கள் இந்த் மோசடி செயலிகளை கண்டுபிடிக்கும் வண்ணம் தமது தொழில் நுட்பத்திறனை மேம்படுத்துவதோடு, சமூக ஊடக நிறுவனங்களை அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் கோர வேண்டும்.
இல்லையேல் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த
மோசடி செயலிகள்
மூலம் பணத்தையும் நிம்மதியையும் இழப்பார்கள்.