-தேனி, மே 1 : ”10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்து முடித்துள்ளோம். ‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என தேனி – அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தை 1997 ல் உருவாக்கியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. கலெக்டர் அலுவலக கட்டடம், தேனி உழவர் சந்தை, 18 ம் கால்வாய் திட்டம், சோத்துப்பாறை அணை கட்டி முடிக்கப்பட்டது.
இதுபோல் ஏராளமான பணிகள் தி.மு.க., அரசால் செயல்படுத்தப்பட்டது.ரூ.8 கோடியில் பெரியகுளம் அரசு மருத்துவமனை, ரூ.4 கோடியில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். ரூ.7.5 கோடியில் குமுளி பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தப்படும். ஆண்டிபட்டியில் ஜவுளிப்பூங்கா செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை உறுதியாக நிறுவப்படும்.
இங்கு 10,427 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுதான் நல்ல ஆட்சியின் இலக்கணம். இது மக்களுக்கான அரசு. இதைத்தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சியை அனைவருக்கும் சாத்தியபடுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ரூ.317 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.ஓராண்டில் சாதனைரூ.64 ஆயிரம் கோடி முதலீட்டின் மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளோம். இப்படி தமிழகத்தில் 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்து முடித்துள்ளோம். ‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப உழைத்துக் கொண்டிருக்கிறேன். கருணாநிதி சொன்னது
போல் ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என்பதற்கேற்ப ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு மகனாக அறிவித்தது பெருமையாக உணர்கிறேன். இதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது பா.ஜ., உட்பட அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்தனர். ஒரு கட்சி மட்டும் ஆதரவளிக்கவில்லை.
அது எந்த கட்சி என நான் சொல்ல விரும்பவில்லை. கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டதற்கு அந்த நபரை காரை விட்டு இறக்கியவர் எம்.ஜி.ஆர்., அந்தளவு அரசியல் நாகரிகத்தை தற்போதுள்ளவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.பின், ரூ.114.21 கோடி மதிப்பிலான 40 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, சாத்துார் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), கலெக்டர் முரளீதரன் முன்னிலை வகித்தனர்.
டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்.துளிகள்* விழா மேடை அருகே முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் டி.ஐ.பி.ஆர்., வீடியோ கேமராக்களை பரிசோதனை செய்த போது தொடர் பீப் சப்தம் கேட்டது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. பின், மீண்டும் பரிசோதனை செய்தபோது கேமரா சப்தம் என தெரியவந்ததால் நிம்மதி அடைந்தனர்.* காலை 10:13 மணிக்கு விழா மேடையில் ஏறிய முதல்வர், முஸ்லிம் ஆண்கள் நின்றிருப்பதை கவனித்து, மேடையில் இருந்து இறங்கி 15 பேரிடம் மனுக்களை பெற்றார்.தேனி அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் விழாவிற்கு வராததால் அவருக்காக அமைக்கப்பட்ட இருக்கை முதல்வர் வருவதற்கு முன் அகற்றப்பட்டது.தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினருக்கு பயனாளிகள் பகுதிக்கு பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதிருப்தி அடைந்தவர்கள் விழாவை புறக்கணித்து செல்ல முயற்சித்தனர். கலெக்டரிடம் கூறி மேடையின் அருகே தோட்டக்கலைத்துறை கண்காட்சி கூடத்திற்கு எதிராக அமர வைக்கப்பட்டனர்.முதல்வர் கவனக்கட்டுரையால் பயன்முதல்வர் வருகையை யொட்டி தினமலர் நாளிதழில் மாவட்டத்தின் நீண்டகால முக்கிய பிரச்னைகளை பற்றி ‘முதல்வர் கவனக்கட்டுரை’ என நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வர் ஸ்டாலின் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள ஆண்டிபட்டி உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா, ரூ.8 கோடியில் பெரியகுளம் அரசு மருத்துவமனை, ரூ.7.50 கோடியில் குமுளி பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தப்படும் என்றார்.