கயிறு அல்ல 'கொக்கைன்' – அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள்!

போதைப்பொருட்களை கடத்துவதில் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வரும் கடத்தல்காரர்கள் தற்போது கயிறு மூலமாக புதிய முறை ஒன்றை பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது.
ஈரானில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிப்பாவாவ் துறைமுகத்துக்கு ஒரு சரக்கு கப்பல் கடந்த வாரம் வந்தது. உணவுப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் உட்பட ஏராளமான சரக்குகள் அதில் கொண்டு வரப்பட்டிருந்தன. 10 நாட்களில் அந்தக் கப்பல் அங்கிருந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
image
இதனிடையே, அந்தக் கப்பலில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் உளவுத்துறையினருடன் (டிஆர்ஐ) இணைந்து அந்தக் கப்பலில் பயங்கரவாத தடுப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், எந்த போதைப்பொருளும் சிக்கவில்லை. இருந்தபோதிலும், குறிப்பிட்ட கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் இருப்பதாக தொடர்ந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துக் கொண்டே இருந்தது. இதனால் உஷாரான பயங்கராத தடுப்புப் படையினரும், வருவாய் உளவுப் பிரிவு அதிகாரிகளும் தங்கள் சோதனையை வேறு கோணங்களில் முன்னெடுத்தனர். அதாவது, உதிரிபாகங்கள் உள்ளிட்ட சரக்குகளுக்கு உட்பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் சிக்கவில்லை.
image
இதனால் வெறுத்துப் போன அதிகாரிகள், மீதம் இருக்கும் கயிறு பண்டல்களை விருப்பமில்லாமல் சோதனை செய்தனர். அப்போது அதில் எந்தப் போதைப்பொருளும் இல்லாவிட்டாலும், கயிறு பண்டல்களின் உட்பகுதியில் ஈரப்பதம் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், போதைப்பொருட்களை கண்டறியும் ரசாயனக் கலவையை (கெமிக்கல் சொல்யூஷன்) கொண்டு வந்து அதற்குள் அந்தக் கயிறுகளை மூழ்கடித்து பார்த்தனர். அப்போது அதில் கொக்கைன் போதைப்பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அதில் கலக்கப்பட்டிருந்த சுமார் 95 கிலோ எடைக்கொண்ட கொக்கைனை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது.
கயிறு கொக்கைனாக மாறியது எப்படி?
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறுகையில், “கயிறு மூலமாக கொக்கைனை கடத்தி வருவதை இப்போதுதான் பார்க்கிறோம். கொக்கைனை திரவமாக மாற்றி அதற்கு பெரிய அளவிலான காட்டன் கயிற்றை கடத்தல்காரர்கள் போட்டுள்ளனர்.
image
ஒரு நாள் முழுக்க அந்தக் கயிறுகள் அதில் தோய்ந்துவிடும். பின்னர் அந்தக் கயிறுகளை காய வைத்து கப்பலில் சரக்குகளுடன் சரக்காக அவர்கள் ஏற்றியுள்ளனர். பின்னர் அந்தக் கயிறை இங்குள்ள கடத்தல்காரர்கள் கொண்டு சென்று அதில் இருக்கும் கொக்கைனை தனியாக பிரித்தெடுத்து விடுவார்கள். இந்தக் கடத்தலில் எந்த கும்பல் ஈடுபட்டிருக்கிறது; இதற்கு முன்பு இதுபோன்ற கடத்தலில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என அவர்கள் கூறினர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் 3,300 கிலோ ஹெராயினும், 320 கிலோ கொக்கைனும், 230 கிலோ அசீஷும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.