ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 58 வயது எம்எல்ஏ ஒருவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.ஒடிசாவின் பிஜு ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ. அங்கத் கான்ஹார். இவருடைய பால்ய காலத்தில் இவரால் சில காரணங்களால் கல்வியைத் தொடர இயலவில்லை. ஆனால் படிப்பின் மீது இவருக்கு எப்போதுமே நாட்டம் இருந்துள்ளது.
இதனால் நேற்று (ஏப்.28) ஒடிசாவின் காந்தமால் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். மொத்தம் 5.71 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
நண்பர்களுடன் தேர்வு: ஆனால் இதில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கத் கான்ஹார் தனியாக தேர்வு எழுதச் செல்லவில்லை. அவருடன் அவரது பால்ய நண்பரும் காந்தமால் மாவட்டம் லூசிங் கிராம பஞ்சாயத்துத் தலைவருமான சுதர்சன் கான்ஹாரும் தேர்வு எழுதினார். இவர்களுடன் அங்கதின் கார் ஓட்டுநரான 24 வயது பிதாபஸா டிகாலும் தேர்வு எழுதினார்.
இது குறித்து அங்கத் கான்ஹார் கூறுகையில், “எம்எல்ஏவாக ஆன பின்னர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறோமே என்று எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. நாட்டில் 60, 70 வயதைக் கடந்தவர்களும் தேர்வை எழுதுவதை நான் செய்திகளாகப் படித்துள்ளேன். இப்போது 58 வயதில் நான் தேர்வு எழுதுவது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தால் மட்டுமே போதும். 1978ல் நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் எழுத முடியவில்லை. அதன் பின்னர் பஞ்சாயத்து தலைவர், வட்ட சேர்மன், எம்எல்ஏ என்று அரசியலில் இறங்கிவிட்டேன். இப்போது, 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதுகிறேன்” என்றார்.
இதற்கு முன்னதாக ஒடிசா மாநிலம் எம்.பி. ரமேஷ் மஜிஹி அவரது பதவிக்காலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். பின்னர் பதவிக் காலத்திலேயே பட்டப்படிப்பையும் முடித்தார்.
கடைசியாக வெளியான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, ஒடிசா மாநிலத்தில் ஆரம்பக் கல்வியில் பள்ளி இடைநிற்றல் என்பது 0.8 என்றளவில் உள்ளது. இது கர்நாடகாவில் 1.2 என்றும் ஜார்க்கண்டில் 6.3 என்றும் சத்தீஸ்கரில் 1 என்றளவிலும் உள்ளது. ஆரம்பக் கல்வி அளவில் பள்ளி இடைநிற்றல் தேசிய சராசரி 1.5 ஆக உள்ளது கவனிக்கத்தக்கது.