நீலகிரி மாவட்டம் கோத்தகரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017இல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளனர்.
இவ்வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. 5 தனிப்படைகள், கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் 220க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாள்களில் மீண்டும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து அவரிடம் 2 நாட்கள் கொடநாடு வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பதில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவரிடம், கொடநாடு பங்களா பணியாளர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தனிப்படை காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக, தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடித்துள்ளது.