மும்பை: கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் திடீரென்று ஓரிரு வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. தற்போது, தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 ஆகும். இந்நிலையில், இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2021ம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவீதம் என்று பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதாரம் வருடத்திற்கு 7.5சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கருத்தில் கொண்டால் கொரோனா காலத்தில் சந்தித்த இழப்புகளை 2034 – 2035ம் ஆண்டில் தான் சரி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி அரசின் ஊக்க நடவடிக்கைகளை சார்ந்தே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் உக்ரைனில் நடைபெற்று வரும் போர், பணவீக்கம் ஆகியவை புதிய சவால்களாக உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.