புதுடெல்லி: ‘சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் யோகி ஆதித்யநாத் (உபி), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியும் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:நமது நாட்டில், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக நீதித்துறை பங்காற்றி வரும் நிலையில், சட்டமன்றங்கள் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்து வருகின்றன. தேவைப்படும் இடத்தில், இந்த உறவு நாட்டுக்கான சரியான திசையை தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளது. இந்தியா தனது 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், எளிதாக, விரைவாக, அனைவருக்கும் கிடைக்கக் கூடியவருகின்றன. நீதித்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம். சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளூர் மொழியில் விசாரணைகள் நடத்தப்பட்டால்தான், நீதித்துறையுடன் தொடர்பு உள்ளதாக மக்கள் உணர்வார்கள். அதனால் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். நீதி வழங்குதலில் மக்களின் உரிமை இதன் மூலம் வலுப்படும். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். நீதியை எளிதாக வழங்குவதற்கு காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2015ல் பொருத்தமில்லாத 1800 சட்டங்களை அரசு கண்டறிந்து,அதில் 1450 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற 75 சட்டங்கள் மட்டுமே மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து முதல்வர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.நீதித்துறை சீர்திருத்தம் என்பது வெறும் கொள்கை விஷயம் மட்டுமல்ல. மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அனைத்து விவாதங்களிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். நாட்டில் தற்போது சுமார் 3.5 லட்சம் கைதிகள் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இதில் ஏராளமானோர் ஏழைகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு ஏற்படுத்தி, வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்படும் நிகழ்வுகளில் இத்தகைய கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம். இந்த விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, மனிதாபிமான உணர்வு அடிப்படையில் அனைத்து முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன்னுரிமை அளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.நீதித்துறையில் அரசு தலையிடுவதா?மாநாட்டில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:அரசியலமைப்பானது, தேசத்தின் மூன்று உறுப்புகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு அதிகாரத்தை பகிர்ந்து வழங்குகிறது. இவை தங்களின் கடமையை நிறைவேற்றும் போது லட்சுமண ரேகையை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டப்படியாக எல்லாம் நடந்தால், நீதித்துறையானது அரசு நிர்வாகத்தில் தலையிடாது என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். நீதிமன்றங்களில் அரசுகளே மிகப்பெரிய வழக்குதாரர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 சதவீத வழக்குகள் அரசாங்கங்கள் சம்மந்தப்பட்டது.நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளின் செயலற்ற தன்மை பொதுமக்களை நீதிமன்றங்களை நாடச் செய்கிறது. நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை கூட அரசு நிர்வாகம் வேண்டுமென்றே செயல்படுத்தாமல் மெத்தனமாக இருக்கின்றன. இதன் காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற புதிய சுமை அதிகரித்து வருகிறது.இன்றைய நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளில், 388 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் என்ற விகிதம் மிகவும் ஆபத்தானது. இதே போல, பொதுநல வழக்குகள் தற்போது சுயநல வழக்குகளாக மாறி வருகின்றன. அற்ப வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. பொது நலனுக்கானதுதான் பொது நல வழக்குகள். ஆனால் ஒரு அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தவும், அரசியல் பழிவாங்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படவும் பொது நல வழக்கை ஒரு கருவியாக பயன்படுத்தும் நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நாளை வெளிநாட்டு பயணம் 8 தலைவர்களுடன் சந்திப்புபிரதமர் மோடி இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை நாளை தொடங்குகிறார். உக்ரைன் போரால் இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகளும் அதிக நெருக்கத்தை விரும்பும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். இதில் 65 மணி நேரத்தில் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 7 நாடுகளைச் சேர்ந்த 8 உலக தலைவர்களையும், 20 உலகளாவிய தொழில் அதிபர்களையும் அவர் சந்திப்பதற்கான ‘பிஸி’யான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை, ஜெர்மனி செல்லும் அவர் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்திக்கிறார். பின்னர் டென்மார்க் சென்று, அங்கிருந்து 4ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் 2வது முறையாக வென்ற மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.