சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி  நிறுவனம் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள அமலாக்கத்துறை, அந்நிறுவனத்தின் சொதுக்களை முடக்கி உள்ளது.

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டும் செல்போன்களுக்கு தேவையான பொருட்கள், ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் செல்லிடப்பேசி தயாரிப்பாளர்கள், சீனாவை தலைமையகமாகக் கொண்டிருக்கும் சியோமியின் குழும நிறுவனங்களிலிருந்து  நேரடியாக கொள்முதல் செய்து, சியோமி அளிக்கும் குறிப்புகளின்படி செல்லிடப்பேசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆனால், சியோமி இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தொழில்நுட்ப உத்திகளையோ, மென்பொருள் தொடர்புடைய உதவிகளையோ, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அளிக்காமல் செயல்பட்டு வருகிறது. இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கூறப்படுகிறது. மேலும்  சியோமி இந்தியா நிறுவனம் பணத்தை வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதுகுறித்து விசாரணை செய்த அமலாக்கத்துறை, சியோமி நிறுவனம் அனுப்பும் பணத்தை பெறும் அந்த நிறுவனங்கள் எந்த வணிகச் சேவைகளையும் மேற்கொள்ள வில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, இந்த நிறுவனம் வங்கிகளுக்கு தவறான தகவல்களை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் நான்காவது பிரிவின் கீழ் விதிமீறலாகும். அதன்படி சியோமி நிறுவனம் மீது நடவடிகை எடுத்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை அதிகாகிள் கூறும்போது, சியோமி நிறுவனம், ஏற்கனவே, மிகப்பெரிய தொகையை சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது. மீதத்தொகைதான் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் இருந்தன. குழும நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ராயல்டி தொகை செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட வணிகத் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை சியோமி  நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சியோமி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.