சென்னைன தி.நகர் காவல் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவளின் அம்மா வனஜா (44). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல 29.4.2022-ம் தேதி வனஜா தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக மகளை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் மகளைத் தேடி வனஜா வீட்டுக்குச் சென்றார்.
அப்போது வீட்டில் மகள் இல்லை. அதனால் அவளை வனஜா தேடிய போது அருகில் உள்ள வீட்டுக்குள் இருந்து மகளின் அழுகை குரல் கேட்டது. உடனடியாக அங்குச் சென்று வனஜா பார்த்தார். அப்போது மகள் அழுதுகொண்டிருந்தாள். அவளின் அருகில் இரண்டு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து மகளிடம் என்ன நடந்தது என்று வனஜா விசாரித்தார். அப்போது சிறுமி, தன்னை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற இரண்டு பேர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகக் கண்ணீர் மல்க கூறினார்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த வனஜா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து வனஜா அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சிறுமி அளித்த தகவலின்படி செல்வம் (30), கார்த்திக்கேயன் (22) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.