புது டெல்லி:
இந்தியாவில் இயங்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
ஜியோமி நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜியோமி நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கி விற்பனை செய்கிறது. இந்த ஒப்பந்த உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்களின் விநியோகத்திற்கும், ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கும் ஜியோமியின் சீனா தலைமையகம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகின்றனர்.
ஜியோமி நிறுவனம் வருடத்திற்கு ரூ.34,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது.
இந்த வருவாயின் பெரும்பகுதியை சீனாவில் உள்ள தனது குழும நிறுவனங்களுக்கு வழங்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோமியின் சீன தலைமை குழுமம் அறிவுறுத்தலின் படி இந்த ராயல்டி தொகை அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ஹெச்.எஸ்.பி.சி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டூட்சே வங்கி ஆகியவற்றில் உள்ளது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு தொடர்பில்லாத நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு ஜியோமி இந்தியா தொழில்நுட்ப உள்ளீடு மற்றும் மென்பொருள் தொடர்பான எந்த உதவியையும் வழங்கவில்லை. ஆனால் எந்த வகையான சேவையையும் வழங்காத மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை மாற்றியுள்ளது. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது வங்கிகளுக்கு தவறான தகவலையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
நீண்ட நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ஜியோமியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.