நாகையில் சித்திரை தேர் திருவிழாவின்போது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த உத்திராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருஅடைத்தான் சப்பர தேரோட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
70 அடி உயரம் கொண்ட சப்பரத்தை ஊர் மக்கள் இழுத்து சென்றனர். அவ்வப்போது சப்பரத்தை நிறுத்த அதன் சக்கரங்களுக்கு அடியில் முட்டுக்கட்டைப் போட்டு சப்பரத்தை நிறுத்த வேண்டும். அந்த பணியில் 30 வயதான தீபராஜன் என்பவர் ஈடுபட்டிருந்தார். சப்பரத்தை அவர் நிறுத்த முயன்ற தருணத்தில் பக்தர்கள் சப்பரத்தை வேகமாக இழுத்ததால், முட்டுக்கட்டை போட முயன்ற தீபராஜன் மீது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்து ஆம்புலன்சில் வைத்து மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தீபராஜன் உயிரிழந்தார்.
தஞ்சையில் உயர்மின்னழுத்த கம்பியில் சப்பரம் உரசியதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை சப்பரத் தேரோட்டத்தின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் வேறு விதமாக உயிர்பலி ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை கலக்கமடைய செய்துள்ளது.
இதையும் படிக்க:11 பேர் உயிரிழப்பு: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்படி?- முழு விவரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM