சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 24, பெண்கள் 25 பெற என மொத்தம் 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,932 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,394 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 43 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 513 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 54 ஆகவும், சென்னையில் 35 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி வந்தவுடன் தமிழகத்தில் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.