தொழிலாளர்களின் உழைப்பால்தான் இந்த உலகம் இயங்குகிறது- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மே தின வாழ்த்து

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மே தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:

“தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ ?” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கேட்ட கவிதை வினாவை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்றளவும் இசை வடிவில் நம் உள்ளத்தில் ஒலிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த உலகம் இயங்குவது கோடானு கோடி தொழிலாளர்களின் தூய்மை மிகு உழைப்பினால் தான்; அதை நமக்கு நினைவூட்டும் நாள் தான் மே தினம்.

வயல் வெளிகளில் விளைந்து நிற்கும் மணிகளாக, எழிலார் சேவைகளில் பூத்துக் குலுங்கும் மலர்களாக, ஓடும் நதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட கரைகளாக ஆலைகள் தோறும் ஆர்த்திடும் இயந்திரக் கூட்டங்களாக, தொழிலாளர் தோழர்களின் வியர்வையும், கண்ணீரும் உலக மக்களை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. தங்களின் தன்னலமற்ற, ஓய்வறியா, நிகரில்லாதியாக உழைப்பின் மூலம் நம்மையெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்த நன்றிப் பெருக்கோடு மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களின் மேன்மைக்கு அடித்தளம் அமைத்த போராட்டங்களின் வெற்றித் திருநாளாகக் கொண்டாடப்படும் “மே தின “ நாளில் உழைக்கும் தொழிலாளர்கள் வெல்க! வாழ்க! என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்பை வாழ்த்து முழக்கங்களாகக் கூறி மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.