நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதீஸ்வரர் சுவாமி சப்பரம், தெற்கு வீதியில் திரும்பியது. இரவு 12.35 மணிக்கு சப்பரம் நிற்பதற்காக முட்டுக்கட்டை போடும் தீபராஜன் என்ற தொழிலாளி முட்டுக்கட்டையை அகற்றும்போது எதிர்பாராவிதமாக தடுமாறி விழவே, அவர் வயிற்றின் மீது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவரை மீட்டு திருமருகலிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்து வழிபாட்டுத் தலங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்.பி. ஜவஹர் உத்தரவிட்டுருந்தார். அதனைத் தொடர்ந்து உத்திராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தீபராஜன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சப்பர விபத்தில் பலியான தீபராஜன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.