அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 போன்ற தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இது பாலிவுட் சினிமாவில் எந்த விதமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், “ஒரு படத்தின் தகுதிக்கு மேல் அதை பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. நாளை வேறொரு படம் வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவார்கள். இது வழக்கம்” என்று கூறிய அவர், தான் தென்னிந்தியப் படங்களை பார்த்ததில்லை என்றும் கமர்ஷியல் படங்களை விட வித்தியாசமான படங்களில் நடிப்பதில்தான் தனக்கு ஆர்வம் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிக் கூறிய அவர், “ஒரு படம் நன்றாக வரும்போது எல்லோரும் சேர்ந்து அதன் தகுதிக்கு மேல் அதிகமாகப் பாராட்டுகிறார்கள். அதேபோல, ஒரு படம் ஹிட் ஆகவில்லை என்றால், படத்தின் தகுதிக்கு மேல் அதை விமர்சிக்கிறார்கள். இது ஒரு ஃபேஷன் போல் மாறிக்கொண்டே இருக்கும். இப்போது பாலிவுட் படம் பெரியதாக ஹிட் கொடுத்தால் இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் அப்படியே மாறும். இது ஒரு ட்ரெண்ட்.
வெளிப்படையாகச் சொன்னால், நான் தென்னிந்தியப் படங்கள் எதையும் பார்த்ததில்லை. தென்னிந்தியப் படங்கள் மட்டுமல்ல, கமர்ஷியல் படங்களையும் பார்ப்பதில்லை. நான் மிகவும் பிஸியாக இருப்பதால் படங்களைப் பார்க்க எனக்கு நேரமும் கிடைப்பதில்லை” என்று கூறினார்.
மேலும், “ஏதாவது ஒரு படம் வெற்றி பெறும்போது அதைத் தொடர்ந்து வரும் படங்களின் ஸ்கிரிப்ட்கள் பெரும்பாலும் அதன் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. நாம் அதில் எளிதாக ஈர்க்கப்பட்டு ஹிட்டான அதே மொழியில் பேசத் தொடங்குகிறோம். இதுபோல் ஒரே மாதிரியான ஸ்கிரிப்டுகள், உரையாடல்கள் மற்றும் அணுகுமுறைகள் எங்களிடம் வருகின்றன. இதில் எனக்கு உடன்பாடில்லை. இவை அனைத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். நாம் அவர்களுக்கு எதை வழங்குகிறோம் என்பது முக்கியமானது. மக்களுக்கு வித்தியாசமான படங்களை கொடுப்பதையே நான் விரும்புகிறேன். கமர்ஷியல் படங்களை நான் பார்ப்பதில்லை. அதில் ஈடுபாடு இருப்பதில்லை. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கு ஏன் அப்படி ஆகிறது என்று நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்று கூறினார்.