நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி இம்மாநாடு நடந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு, தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர்
நரேந்திர மோடி
தொடங்கி வைத்தார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப் போன இந்த மாநாடு 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நீதிமன்ற கட்டமைப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தொழில்நுட்பம் என்பது இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது. கடந்த ஆண்டில் உலகளவில் நடந்த மொத்த பண பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது.
சட்டத் துறையில் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுவானதாகி வருகிறது.
சட்டங்களும், உத்தரவுகளும் தெளிவான பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். தீர்ப்புகளின் போது மனித உணர்வுகள் தொடர்பான விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
காலாவதியான சட்டங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். சட்டப்படிப்புகள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும். சட்டப் படிப்புகள் சொந்த மொழிகளில் படிக்கும் நிலை வர வேண்டும். இதனை ஊக்குவிக்க வேண்டும். இது சட்டம் படிக்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையை தரும். படிப்புடன் இணைந்திருக்க ஏதுவாக இருக்கும்.
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும். 2015 ஆம் ஆண்டில், பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1,800 சட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம். இவற்றில் 1,450 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், 75 சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் ரத்து செய்துள்ளன.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.