பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு அரசியல் பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று, முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘காலிஸ்தான்’ நிறுவன நாளையொட்டி நேற்றைய தினம் (ஏப்ரல் 29) பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர்களால் சீக்கியக் கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த வகையில் பஞ்சாப் பாட்டியாலாவில் ”காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷமிட்டபடி காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.
அதேசமயம், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு எதிர்கருத்துடைய சிவசேனா அமைப்பினர், இந்த ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, “காலிஸ்தான் முர்தாபாத்” என்ற கோஷமிட்டபடி எதிர் ஊர்வலம் நடத்தினர். சரியாக, இந்த ஊர்வலம் பாட்டியாலா காளி கோவிலை அடைந்தபோது இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. பின்னர் கைகலப்பு மோதலாக முற்றி, இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்த தகவலறிந்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்தக் கலவரத்தில் 4 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த கலவரம் மற்ற பகுதிகளில் பரவிடாமல் கட்டுக்குள் வைப்பது குறித்து, காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாநில முதல்வர் பகவந்த் மான், ”பஞ்சாப்பில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. மாநிலத்தில் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
மேலும், “இந்த கலவரத்தினால் மாநிலத்தின் அமைதி, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க, வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்படுகிறது” என அறிவித்தார். இந்த நிலையில், பாட்டியாலா துணை கமிஷனர், “அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை மொபைல் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்படுகிறது” என தெரிவித்திருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் விமர்சனம்:
பஞ்சாப்பில் நடைபெற்ற இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பாட்டியாலாவில் நடைபெற்ற கலவரம் மிகுந்த கவலையளிக்கிறது. பஞ்சாப் போன்ற முக்கியமான எல்லை மாநிலத்தில் அமைதியும் நல்லிணக்கமும் மிகவும் அவசியம். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய பஞ்சாப் அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், “பாட்டியாலா மக்கள் அமைதியை நேசிப்பவர்கள், அவர்களை ஆத்திரமூட்டலில் ஈடுபட வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். பஞ்சாப் காவல்துறை இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பதை உறுதி செய்யும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேசமயம், பா.ஜ.க இந்த சம்பவம் குறித்து மாநில அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஷாஜத் பூனவாலா, “பஞ்சாப் மாநிலத்தில் முழுமையான குழப்பம் நிலவுகிறது. மாநிலத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அராஜகவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், தனிப்பட்ட பகைமைக்காக மாநில காவல்துறையை ஆம் ஆத்மி அரசு பயன்படுத்துகிறது” என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
இந்த கலவர சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு, இன்டர்நெட் சேவை தடை போன்ற காரணங்களால் பாட்டியாலா மாவட்ட மக்கள் தங்களது இயல்பு நிலையை இழந்திருக்கின்றனர்.