மதுரை: பராமரிக்க நிதியில்லாமல் பாரம்பரியமான மதுரை மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியம் கடந்த 3 ஆண்டுகளாகப் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.
தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாவது இடத்தில் சிறந்த மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் அதிகளவு நோயாளிகள், திறமையான மருத்துவப் பேராசிரியர்கள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றால் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், கவுன்சிலிங்கில் மருத்துவப் படிப்புகள் படிக்க மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்வார்கள்.
இந்தக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவ கருத்தரங்குகள், மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 1989-ம் ஆண்டு 1,100 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமான ஆடிட்டோரியம் கட்டப்பட்டது. கல்லூரி கருத்தரங்கு மட்டுமில்லாது சுகாதாரத்துறை செவிலியர்கள் பயிற்சிகள், மருத்துவர்கள் கருத்தரங்கு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடத்தப்படும் பெரிய நிகழ்ச்சிகளும் இந்த ஆடிட்டோரியத்தில் நடந்தது.
இந்த ஆடிட்டோரியம் கட்டிய பிறகு பாரமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனால், ஆடிட்டோரியத்தின் மேற்கூரையில் விரிசல் விட்டும், மேற்கூரை சிலாப்புகள் இடிந்தும் விழுந்தன. மழைநீரும் ஒழுகியது. ஆடிட்டோரியத்தை பராமரிக்க ரூ.2 கோடிக்கு மேல் நிதி தேவைப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டாக தமிழக அரசு மிகப் பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது. கரோனா தொற்றால் இந்த ஆடிட்டாரியத்தை பராமரிக்கும் முனைப்பை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் காட்டப்படவில்லை. அதனால், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த ஆடிட்டோரியம் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடந்தது.
வழக்கமாக முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, இந்த ஆடிட்டோரியத்தில்தான் நடக்கும். மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், ஆடிட்டோரியம் சிலதமடைந்து பூட்டி கிடந்ததால் இன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 6 மாடி கட்டிடத்தில் உள்ள உள் அரங்கில் நடந்தது. அதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அமர இடமில்லாமல் நின்றனர். இடநெருக்கடியிலே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால், விழா மேடையிலே டீன் ரெத்தினவேலு நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனிடம், ஆடிட்டோரியத்தின் நிலையை கூறி, அதனை பராமரிக்க நிதி அமைச்சர் ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆடிட்டோரியத்தை பராமரிக்காமல் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது. அதனாலே 3 ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளோம். மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் மேற்கரை இடிந்து விழவும் வாய்ப்பிருக்கிறது. சாதாரணமாகவே மேற்கூரை சிலாப்புகள் இடிந்து விழுகிறது. நிதி அமைச்சர் நிதி ஒதுக்கி ஆடிட்டோரியத்தை பராமரிக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.