பலகோடி மதிப்பில் தயாராகவிருந்த பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நடிகர் யஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு கடந்த வாரம் நடிகர் அக்ஷய்குமார் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல நடிகரும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் – 2 திரைப்படத்தின் ஹீரோ யஷ், பலகோடி பட்ஜெட்டில் தயாராகவிருந்த பான் மசாலா மற்றும் ஏலக்காய் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ்ஷின் ஒப்புதல்களை நிர்வகித்து வருகிற டேலண்ட் மேனேஜ்மெண்ட் ஏஜென்சியின் தலைமை அதிகாரி அர்ஜூன் பானர்ஜி இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அர்ஜூன் கூறுகையில், ‘’யஷ் மற்றும் அவருடைய நீண்டகால நண்பர் பிரசாந்துடன் நாங்கள் மார்ச் 2020ஆம் ஆண்டு இணைந்தோம். எங்களுக்குள் தொடர்புகொள்ள ‘storm is coming’ என்ற பெயரில் க்ரூப் ஒன்றை உருவாக்கினது நன்கு நினைவிருக்கிறது. கே.ஜி.எஃப் – 2 இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை.
நாங்கள் இந்த பார்ட்னர்ஷிப்பை தொடர விரும்புகிறோம். சமீபத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு யஷ்ஷிற்கு கிடைத்தது. ஆனால் அதை மறுத்துவிட்டோம். யாருடன் வேலைசெய்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். யஷ் எப்படி நல்லமனிதரோ, அவரைப்போலவே சரியான தகவலை ரசிகர்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.