புது டில்லி: பல் மருத்துவக் கல்லுாரிகளில், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருப்பதால், மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வின் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நாட்டின் பல் மருத்துவக் கல்லுாரிகளில், ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ‘கட் ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருப்பதால், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.எனவே, கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, நீட் தேர்வு எழுதி கல்லுாரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பல் மருத்துவக் கல்லுாரிகளில், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இதனால் கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பல் மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது. இதற்கிடையே, காலி இடங்களை கருத்தில் கொண்டு, பல் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஏப்., 11ல் இருந்து மே, 15 ஆக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனவே, மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், விதிகளின் அடிப்படையில் புதிய கட் ஆப் மதிப்பெண் குறித்த அறிவிப்பினை, ஒரு வார காலத்தில் வெளியிட வேண்டும் என, இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement