திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சக மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாப்பாக்குடியைச் சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவர், பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி இவருக்கும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே கையில் சமுதாயக் கயிறு கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஆதரவாக அவரவர் நண்பர்களும் ஒன்றுகூடவே, இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.
எதிர்தரப்பு மாணவர்கள் கற்களால் தாக்கியதில் செல்வசூர்யாவுக்கு காதோரம் அடிபட்டு காயமாகி ரத்தம் கொட்டியுள்ளது. தகவலறிந்து போலீசார் வந்து சமாதானம் செய்த நிலையில், காயமடைந்த செல்வசூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 4 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து சக மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளனவா என ஆய்வு செய்ய, பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.