இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானில், இரு குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது, சுகாதார நிபுணர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.உலக அளவில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்நோய் பாதிப்பு தொடர்கிறது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியை சேர்ந்த, 2 வயது சிறுமி, சமீபத்தில் பக்கவாதத்தால் முடங்கினாள். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், அவர் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இஸ்லாமாபாதில் உள்ள பாக்., தேசிய போலியோ ஆய்வகம், இதை உறுதி செய்துஉள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த, 15 மாத ஆண் குழந்தையும் போலியோவால் பாதிக்கப்பட்டது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக உலகில் எங்கும் போலியோ உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது பாகிஸ்தானில் மீண்டும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,
இது, சர்வதேச சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வருவோர் மீது, மூட நம்பிக்கை காரணமாக பழமைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் தான், இங்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
Advertisement