சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.
4 நாட்கள் பயணமாக இலங்கை செல்லும் அவர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிய உள்ளார். மேலும் அங்கு நிலவும் பொருளாதார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் மக்களின் உடனடி தேவைகள் குறித்தும் அறியவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பயணத்துக்குப் பின் இலங்கையில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி: இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தது. ஆனால், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பாலும், அதன் பின்னர் வந்த கரோனா பெருந்தொற்றாலும் அங்கு சுற்றுலா பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் அதைவிடவும் முக்கியமானது, பட்ஜெட்டுகளை மிகப்பெரிய பற்றாக்குறைகளுடன் நிறைவேற்றிய அதிபரின் திறமையின்மையும் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் யார் பேச்சையும் கேட்காமல் பல்வேறு வரிவிதிப்பிலும் சலுகை வழங்கியதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கியில் சிக்கியிருக்க நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் தொடர் உதவி: இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவி வழங்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. மேலும், 760 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்களை வழங்கி உதவியுள்ளது. ஏற்கெனவே 40,000 டன் அரிசி மற்றும் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான அனுமதிகளை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசின் தீர்மானம் ஒருமனதாக நேற்று (ஏப்.29) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.