பாட்டாளிகள் நாள் || பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளிகள் நாள் வாழ்த்து செய்தி :

உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள்  பாட்டாளிகள் தான். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் முதுகெலும்பான பாட்டாளிகள் சந்தித்த சவால்கள் ஏராளமானவை; எண்ணிக்கையில் அடங்காதவை.  ஆனாலும், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்து, கடந்த 2 ஆண்டுகளில் அனுபவித்த துன்பங்களை ஒதுக்கித் தள்ளி முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவது தான் பாட்டாளிகளின் வலிமை ஆகும். அந்த வலிமை தான் அவர்களையும், உலகையும் வாழ வைக்கிறது.

உலக அரங்கில் மட்டுமின்றி உள்ளூரிலும் பாட்டாளிகள் தான் வலிமையானவர்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையையும் சுரண்டும் சக்திகளாலும், அடுத்தவர் உழைப்பில் விளைந்ததை   அனுபவித்து மகிழும் ஒட்டுண்ணிகளாலும் தடுக்க முடியாது. பாட்டாளியாக நீ தான் போர்கொடி  உயர்த்தினாய்; நீ தான் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினாய்; நீ தான் துப்பாக்கி குண்டுகளுக்கு மார்பைக் காட்டி வீரச்சாவை விரும்பி ஏற்றுக் கொண்டாய். இவ்வளவு தியாகங்களை செய்த உனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் சதிகாரர்களால் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இறுதி வெற்றி உனக்குத் தான்…. உனது உரிமையை நீ வென்றெடுக்கப்போவது உறுதி.

பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. உலகை இயக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு, மாநிலத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.