சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகரில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சூழலில், சென்னை மாநகராட்சியே குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை அமைப்பதன் மூலம் காற்று மாசுபாட்டை திணிப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக நஞ்சை குடிக்க முடியாது. தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இலவசமாக அளிக்கப்பட்டாலும் கூட, சென்னை மாநகரின் காற்றினை மாசுபடுத்தி மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி மூட வேண்டும்; புதிய ஆலைகளையும் இனிமேல் தொடங்கக்கூடாது. குப்பையில்லா மாநகர கோட்பாட்டையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.