புதுச்சேரி: “தொழில்முனைவேருக்கு உறுதுணையாக அரசு இருக்கும், தொழில் தொடங்குவோருக்கு விரைவாக உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்“ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (ஏப்.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐஐ தென்மண்டல தலைவர் சுசித்ரா எலா, துணை தலைவர் கமல் பாலி, புதுச்சேரி தலைவர் சுரேந்தர், துணை தலைவர் ஜோசப் ரோசரியோ, தென் மண்டல இயக்குநர் ஜெயேஷ் மற்றும் 6 மாநிலங்களை சேர்ந்த இந்திய தொழில் கூட்டமைப்பு பிரநிதிகள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது: “புதுச்சேரியில் தங்குவதற்கான அனைத்து சூழல்களும் உள்ளன. இது சிறிய மாநிலம் என்றாலும் ஒரு சிறந்த மாநிலம். புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த பூமியாகவும், ஆன்மிக பூமியாகவும் உள்ளது. இங்கு இந்தக் கூட்டம் நடத்துவது எங்களுக்கெல்லாம் பெருமை. புதுச்சேரிக்கு பெரிய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறோம். ஏழை மாணவர்கள் சிரமமில்லாமல் மருத்துவம், பொறியியல் படிக்க ஏதுவான சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம்.
பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியும், வேலைவாய்ப்பும் தரவேண்டியது அவசியமாக உள்ளது. திறமையான பிள்ளைகள் எங்களிடம் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி தேவை என்பது உங்களுடைய எண்ணமாக இருக்கும். அந்தப் பயிற்சியை மத்திய அரசோடு சேர்ந்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் திறமையான பணியாளர்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முனைவராக இருக்க வேண்டும். நல்ல தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது எங்களது விருப்பம். அதற்குரிய கட்டமைப்பை செய்து கொடுக்க அரசு ஆர்வமாக உள்ளது.
புதுச்சேரியில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. நல்ல சாலை வசதி உள்ளது. தற்போது பெங்களூர், ஹைதாரபாத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்தவதற்காக 300 ஏக்கர் நிலம் தமிழகத்தில் இருந்து கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தத் திட்டம் முடிந்தால் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும். தொழில்முனைவேருக்கு உறுதுணையாக அரசு இருக்கும். தொழில் தொடங்குவோருக்கு விரைவாக உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பல தொழிற்சாலை கொண்டுவரவும் அரசு கவனம் செலுத்தும். புதுச்சேரியில் கடல் வளம் உள்ளது. அந்த வளத்தை பயன்படுத்தி சுற்றுலா துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். மருத்துவப் பூங்கா தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் நீங்கள் தொழில் தொடங்க வரவேண்டும்.
தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு கவனத்தில் கொள்ளும். இது தொடர்பாக வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசி முடிவு எடுக்கப்படும். அதேபோல், ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்குவோருக்கான உரிமங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.