புதுடெல்லி:
அனைவருக்கும் பொதுவான, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பாஜக ஆளும் மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது மாநிலத்தில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
அதன் பின்னர் பொது சிவில் சட்ட வரைவு மசோதா குறித்து சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆய்வு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பொது சிவில் சட்டத்தை அனைவரும் விரும்புகின்றனர் என்றார்.
எந்த முஸ்லிம் பெண்ணும் தனது கணவர் 3 மனைவிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதை விரும்பவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் தமது பிரச்சினை இல்லை என்றும், இது அனைத்து முஸ்லிம் பெண்களுக்கான பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
முத்தலாக் சட்டம் ஒழிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்….
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்