தேவையான நிலக்கரியை தமிழகத்துக்கு கொண்டு வந்து, தடையில்லா மின்சாரத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிதித்தாவது,
“தமிழகத்தில் மின் வெட்டால் விவசாயிகள், விசைத்தறியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சேலம் பகுதியில் விசைத்தறியாளர்கள் அதிகம் உள்ளனர். இந்த மின் தடை காரணமாக கடுமையாக இந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளதால், டீசல் பயன்படுத்தியும் விசைத்தறி இயக்க முடியாத ஒரு நிலை வந்துள்ளது. எனவே இந்த நிலையைப் சரிசெய்வது தமிழக அரசின் கடமையாகும். அதேபோல் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில், வரியை தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எடப்பாடி கே பழனிச்சாமி கோரிக்கை வைத்தார்.