சியோல் : ”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்,” என, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரித்துள்ளார்.கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
ஏவுகணை
இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில், ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, கிம் ஜங் உன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று கிம் ஜங் உன், ராணுவ அதிகாரிகளை அழைத்து அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து, நம் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாட்டு நலனுக்கு எதிராக மிரட்டல் விடுப்பது அல்லது ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளும்பட்சத்தில் அதை தடுக்க, நாம் முன்கூட்டியே அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில், ‘வட கொரியாவின் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கும் வலிமை எங்களிடம் உள்ளது’ என, தென் கொரிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு கிம் ஜங் உன் பதிலடி தந்துள்ளார். அமெரிக்கா விதித்து உள்ள பொருளாதார தடைகளை நீக்க வட கொரியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிட்டால் தான், தடையை நீக்க முடியும் என, அமெரிக்கா தெரிவித்து விட்டது.
13 சோதனைகள்
இதனால் அமெரிக்காவை ஆதரிக்கும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளை மிரட்ட, வட கொரியா தொடர்ந்து நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தாண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட, 13 சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது.
Advertisement