“வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” என தேனியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.
தேனி பெரியகுளம் அன்னஞ்சி பைபாஸ் சாலை அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.259.82 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.வீ. முரளிதரன் தலைமை வகித்தார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று, தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 74.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.114. 21 கோடி மதிப்பீட்டில் ‘முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்தும், 10,427 பயனாளிகளுக்கு ரூ.71.4 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ”கொரோனா தொற்றால் பல மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. தேனி மாவட்டத்தில் முதன்முறையாக கற்றுப்பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி. பெருமையாக கருதுகிறேன். அணை என்றால் வைகை அணை. மலை என்றால் மேகமலை, அருவி என்றால் சுருளி அருவி என தேனி மாவட்டம் அனைத்திலும் சிறப்பு பெற்றது.
திண்டுக்கல் பெரியசாமியாக அறியப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு அரசின் நலத்திட்டங்கள் செயல்படுவதற்கு சிறப்பாக தனது பணியை செய்து வருவதால் தற்போது தேனி, திண்டுக்கல் பெரியசாமியாக அறியப்படுகிறார்.
நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியை பார்க்கும் பேரறிஞர் அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது நினைவுக்கு வருகிறது. நலத்திட்ட உதவிகளை பெற்று நீங்கள் மகிழ்ச்சி அடைவதுதான் எனக்கு பூரிப்பு. அதுதான் என்னை சோர்வில்லாமல் இருக்க வைக்கிறது. அதனால் தான் என் கடன் பணி செய்து கிடப்பதே. என கடிகார முள்ளாய் ஓடிக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் பொது நிவாரண நிதி, பிரதமர் குடியிருப்பு திட்டம், பழங்குடி மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கான நிதி உதவி, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மகளிர்களுக்கான நிதி என நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளேன்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய் மதிப்பிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பிலும் தரம் உயர்த்தப்படும். ஆண்டிப்பட்டி ஜவுளி பூங்கா செயல்படுத்தப்படும், கம்பம் பகுதியில் உயர்தர நவீன அரிசி ஆலை நிறுவப்படும், போடிநாயக்கனூர் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் 3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும். கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி பேருந்து நிலையம் 7 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
தற்போது திராவிட மாடல் தான் நடந்து கொண்டிருக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல். ஒவ்வொரு தனி மனித தேவையையும் பூர்த்தி செய்வதுதான் அரசின் இலக்கு. அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்பதை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் சார்பாக வைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பின் மேடைக்கு கீழ் அமர்ந்திருக்கும் பயனாளிகளை அவர்களது இடத்திற்கே சென்று சந்தித்து மனுக்களை பெற்றார்.
தேனியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டிபட்டி வைகை அணை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வரும் வழியில் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள ரேசன் கடையில் திடீரென ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் உணவுப் பொருட்கள் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் செயல்படும் மனித நேய காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடி அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.
இதையும் படிக்கலாமே: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – ஜெயலலிதாவின் நிழலாக அறியப்பட்டவரிடம் விசாரணைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM