ஹைதராபாத்: முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி கண்ணீர் மல்கப் பேசினார். முன்னதாக நேற்று ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை ஒட்டி ஹைதராபாத் மசூதிக்கு சென்றார் ஓவைசி. தொழுகைக்குப் பின்னர் அவர் உருக்கமாகப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: “முஸ்லிம்களை நாட்டிலிருந்தே அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. முஸ்லிம் மக்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேரும் இன்னல்களை கூறுகின்றனர். அவர்களின் கடைகளும், வீடுகளும் எப்படி அழிக்கப்பட்டன எனக் கூறினர். ஆனால் முஸ்லிம் மக்கள் இதனால் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. கவலைப் படாதீர்கள். நாம் இதனைப் பொறுமையுடன் கையாள்வோம். அவர்களைப் போல் நாம் எந்த வீட்டையும் இடிக்க வேண்டாம்.
மோடி, அமித் ஷா அவர்களே…! உங்களுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். நாங்கள் அல்லாவுக்கு மடுமே அடிபணிவோம். அல்லா மட்டுமே எங்களுக்குப் போதும். மத்தியப் பிரதேசத்தின் கார்கோனிலும், டெல்லியின் ஜஹாங்கீர்புரியிலும் நடந்ததை நாங்கள் அறிவோம். உயிருக்குப் பயந்து முஸ்லிம்கள் அவர்கள் வாழுமிடத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள். அல்லா எங்களை வாழ அனுமதிக்கும் வரை நாங்கள் உயிர்பிழைத்தே இருப்போம். நீங்கள் எங்களின் வீடுகளை அழித்துள்ளீர்கள். நாங்கள் பொறுத்திருக்கிறோம். ஆனால் அல்லா பொறுக்க மாட்டார். டெல்லி, கார்கோனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஒன்றிணைந்து உதவுவோம். உதவ முடியாவிட்டாலும் கூட அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரே வெறுப்பு அலையை உருவாக்கியுள்ளது. நாம் அனைவரும் பொறுமையாக, வலிமையாக இருக்க வேண்டிய நேரமிது. இப்போது கைகளைக் கூப்பி துவா செய்வோம்” என்று கண்ணீர் மல்கப் பேசினார்.